ஷிப்ட் ஆகிறது சிவாஜி சிலை!

கோரிக்கை

டிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை காமராஜர் சாலையில் இருந்து அகற்றக் கூடாது என்று கோரிவந்த சிவாஜி பேரவை அமைப்பினர், இப்போது சிலையை அங்கிருந்து அகற்றி, மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் இடையே வைக்க வேண்டும் என்று முதல்வர் தனி பிரிவில் மனு அளித்துள்ளனர்.

அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி கணேசனின் பிறந்த தினம் வரும் நிலையில், சிவாஜி பேரவையின் தலைவர் சந்திரசேகர் அளித்துள்ள இந்த மனுவில், ‘மணிமண்டபம் அமைத்து முதல்வரே அதை திறந்து வைக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவால் சிலை அகற்றப்படும் நிலை வரும்போது அந்த சிலையை அதே காமராஜர் சாலையில், காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கு இடையே வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசோ, மணிமண்டபம் கட்டி அதில் சிலையை வைப்போம் என சொல்லிவருகிறது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட அரசு சார்பில ஆந்திர மகிளா சபா அருகில் 12 கிரவுண்டு இடமும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா “சிவாஜி சிலை இப்போது இருக்கும் இடத்தில் இருந்து அகற்ற அரசுக்கு விருப்பம் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவால்தான் அகற்ற வேண்டியுள்ளது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி அங்கு சிவாஜி சிலையை நிறுவுவோம்” என்று கடந்த சட்டமன்றக்  கூட்டத் தொடரிலும் பழைய பல்லவியைப் பாடியுள்ளார்.

சிலையை ஏன் காந்தி சிலை அருகில் வைக்க சொல்கிறீர்கள் என சந்திரசேகரிடம் கேட்டபோது, “நாங்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து சிலையை அகற்ற வேண்டாம் என்றுதான் வலியுறுத்தி வந்தோம். ஆனால், தமிழக அரசே போக்குவரத்துக்கு இடையூறு என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டதால், கடந்த ஆண்டே உயர் நீதிமன்றம் சிலையை அகற்ற, வரும் நவம்பர் மாதம் வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதற்குள் சிலையை அகற்றவேண்டிய நிலை உள்ளது. ஆனால், தமிழக அரசு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி அதில் சிலையை நிறுவுவோம் என்று கூறி அதற்கு இடமும் ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், மணிமண்டபம் கட்ட எந்த பூர்வாங்க பணிகளும் இதுவரை செய்யவில்லை. இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மணிமண்டபம் கட்ட முடியாது. அதோடு அடுத்த மாதம் சிவாஜி பிறந்த தினம் வேறு வருவதால், இந்த சிலையை இங்கிருந்து அகற்றினால், அதே சாலையில் காமராஜர் சிலைக்கும் காந்தி சிலைக்கும் இடையே சிலையை நிறுவவேண்டும் என விரும்புகிறோம்.

மணிமண்டபத்திலும், பீச்சிலும் சிலை இருக்கவேண்டும் என்பதே சிவாஜி ரசிகர்களின் கோரிக்கை. அதை வலியுறுத்தித்தான் முதல்வருக்கு நாங்கள் மனு அளித்துள்ளோம். நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் முன், தமிழக அரசு இதை பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்