‘வெற்றி’ தந்த தோல்வி!

சைதையை சரித்த மகன்வீழ்ச்சி

‘ரமணா’ திரைப்படத்தில் விஜயகாந்த் தன் மாணவர்களை பெரிய பெரிய அதிகாரிகளாக உருவாக்கி நாட்டில் மாற்றங்களைச் செய்வார். சைதை துரைசாமி நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அகாடமியும் தம் ஐ.ஏ.எஸ். மாணவர்களை வைத்து ‘சில தடுமாற்றங்களை’ ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சியைத் தந்துள்ளது.

கொஞ்சம் விலாவரியாகப் பார்ப்போம்.

“சென்னை மாநகராட்சியின், ‘முதல்’ அ.தி.மு.க மேயர் என்ற புகழைச் சொந்தமாக்கியவர் சைதை துரைசாமி. அதை எட்டிப்பிடிக்க அவருக்கு 50 ஆண்டுகள் ஆனது. அந்த 50 ஆண்டுகால உழைப்பை அவருடைய மகன் வெற்றி துரைசாமி ஒரே நாளில் காலி செய்துவிட்டார்” என்கிறார்கள், சைதை துரைசாமிக்கு நெருக்கமானவர்கள்.வெற்றி துரைசாமி மீது அடுக்கடுக்காகக் கிளம்பும் சர்ச்சைகளைப் பார்த்து, ஆளும் கட்சியே மிரண்டுபோய் உள்ளது. பெரிய இடத்து வாரிசு என்ற அடைமொழியை வைத்து, இன்று கோடிகளில் வியாபாரத்தைப் பெருக்கும் தந்திரத்தை அழகாகக் கையாண்டு இருக்கிறார் வெற்றி துரைசாமி.

என்ன நடந்தது?

சைதை துரைசாமியைப் பற்றி நன்கு அறிந்தவர்களிடம் பேசினோம். “சட்டமன்ற தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் கரூர் அன்புநாதன் குடோனில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 820 கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த 11 பணம் எண்ணும் எந்திரங்கள், 4 கார்கள், அரசு சின்னம் பெயர் பொறிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். அன்புநாதன் லிங்க் ஆச்சர்யப்படும் வகையில் இருந்ததால் உடனே வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அன்று மாலையில், அன்புநாதன் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்தார்கள். ஏராளமான ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர். அந்த ஆவணங்களை ஆராய்ந்தபோதுதான், இதன் பின்னணியில் முக்கியப் புள்ளிகளின் வாரிசுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளது வருமான வரித்துறை.

நத்தம் விசுவநாதன் மகன் அமர்நாத், சைதை துரைசாமி மகன் வெற்றி ஆகியோருடன் அன்புநாதன் பல்வேறு பரிவர்த்தனைகள் மேற்கொண்டு இருப்பது தெரியவந்தது. கருப்புப் பணங்களை வெள்ளையாக்குவதில் அன்புநாதன் கில்லாடியாம். அதனால்தான் அமைச்சர்கள் முதல், தொழில் அதிபர்கள் வரை எல்லோரும் அன்புநாதனை சார்ந்து இருந்தார்கள். அதனால்தான் இந்த இரண்டு வாரிசுகளும் அவருடன் தொடர்பில் இருந்தனர் என்கிறார்கள்.

அன்புநாதன் கரூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டதால், அவருடன் ஆலோசனையில் இறங்கினார் வெற்றி. பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கி, விற்று அதில் கணிசமான லாபம் ஈட்டியுள்ளார். சூரிய மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக சித்தார்த் எனர்ஜி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை வெற்றி நடத்திவந்தார். அந்த நிறுவனத்துக்குத் தேவையான நிலங்களை அன்புநாதன் அடிமாட்டு விலைக்கு வாங்கி கொடுத்துள்ளார். வடநாட்டு தொழில் அதிபர்கள் பலருக்குத் தமிழத்தின் பல இடங்களில் நிலம் வாங்கிக்கொடுக்கும் பணியை, வெற்றியும் அன்புநாதனும் மேற்கொண்டுவந்தனர்.

நத்தம் மகன் அமர்நாத்தும், வெற்றியும் நண்பர்களாக இருந்துள்ளார்கள். பல தொழில்களில் இருவரும் சேர்ந்தே ஈடுபட்டு வந்தார்கள். சென்னை மேயராக சைதை துரைசாமி ஆனதும்,  அப்பாவுக்கே தெரியாமல் தனது தொழிலை அழகாக விஸ்தீரணம் செய்துள்ளார் இந்த தனயன். சென்னை மாநகராட்சியில் பல்வேறு வேலைகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அப்போதுதான் அமர்நாத், வெற்றியை தொடர்பு கொண்டார். தனக்கு வேண்டிய நபர்களுக்கு சில கான்ட்ராக்ட்களை முடித்து தரவேண்டியுள்ளார். அதை வெற்றியும் கச்சிதமாக செய்ய, இருவருக்கும் இடையே நட்பு அதிகரிக்கிறது. அதன் பின், கூட்டு தொழிலில் அமர்நாத்தும், வெற்றியும் இணைந்து சூரிய மின்சாரத் தொழிலில் ஈடுபடும் அதானி போன்ற நிறுவனங்களுக்கு இடங்கள் வாங்கிக் கொடுக்கும் பணியைச் செய்துள்ளார்கள். அமைச்சரின் மகனே ஏஜென்ட்டாக இருந்ததால், அரசு தரப்பில் ஈஸியாக அனைத்து கிளியரன்ஸும் கிடைத்தன. அது, இவர்களுக்கு ப்ளஸ் ஆகியது. இவர்களோடு அன்புநாதனும் கைகோக்க ஜெட் வேகத்தில் சென்றது இவர்களது தொழில். பணமும் கோடிகளில் புரண்டது. இவர்களது நட்புறவு தொழில் செய்வதைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் இருந்தது. அதனால்தான், நத்தம் விசுவநாதனின் தேர்தல் வேலையும் அன்புநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிந்தது.

வருமான வரித்துறை சோதனையின்போது, அன்புநாதன் வீட்டில் கிடைக்கப்பெற்ற ஆவணம் ஒன்றில் பெங்களூரில் பெரிய சொத்து ஒன்றை விற்பனை செய்துள்ளார்கள். அந்த ஆவணங்களில், அன்புநாதன் பெயரும், வெற்றியின் பெயரும் இருந்துள்ளன. ஆனால், இந்த சொத்துவிவரங்களை அவர்கள் வருமானவரித் துறையி்ல் காட்டவில்லை. மேலும், சர்வதேச அளவில் நடந்த பணப் பரிவர்த்தனை ஆதாரங்களும் சிக்கியுள்ளன. அதை எல்லாம் ஆதாரமாக எடுத்து கொண்டுதான், வெற்றியின் வீட்டுக்குள் நுழைந்தது வருமானவரித் துறை.  வெற்றி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு மேலும் சில ஆவணங்களைக் கைபற்றியுள்ளார்கள். வெற்றியோடு கூட்டாகத் தொழில் செய்பவர்கள் விவரம் கிடைத்துள்ளது. அதில்தான் பெரிய சிக்கல்கள் எழும்பியுள்ளன. இன்னும் சில முக்கிய வி.ஐ.பி-க்களை விசாரிக்க வேண்டிய அளவுக்கு விவகாரம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்