‘‘ஜெயலலிதாவுக்கும் எனக்கும் எந்தச் சண்டையும் இல்லை!’’ - திருநாவுக்கரசர் பேட்டி

பேட்டி

திராவிட இயக்கத்தில் வளர்ந்து, தேசிய அரசியலில் சங்கமித்தவர் திருநாவுக்கரசர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஏழு ஆண்டுகளில் மாநில தலைவர் பதவியை எட்டிப் பிடித்துள்ளார். கோஷ்டி குழப்பத்தால் தவிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியை எப்படி வழிநடத்தப் போகிறார் திருநாவுக்கரசர் என்ற கேள்வியோடு அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.

‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். கட்சி வளர்ச்சிக்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?’’

‘‘மிகப் பெரிய தலைவர்கள் இருந்த இந்தப் பொறுப்பில் என்னை அமர வைத்துள்ளனர். முதலில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து, அவர்களின் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். தனி கோஷ்டியாக செயல்படாமல், எல்லோருடன் சேர்ந்து, எல்லோர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவேன். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில், இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. அதை முதலிடத்தில் கொண்டுவருவதுதான் இலக்கு.’’

‘‘திராவிட கட்சியின் ஃபார்முலாவை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவருவீர்களா?’’

‘‘தமிழத்தில் இரண்டு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரக் காரணம், அவர்கள் கட்சியின் கட்டமைப்புதான். கிராமபுறங்களிலும், கட்சியை கட்டமைப்போடு உருவாக்கியுள்ளார்கள். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்க வேண்டும். ஆதிதிராவிட, சிறுபான்மை மக்களும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக இருந்தவர்கள். அவர்கள் தற்போது பிரிந்து நிற்கிறார்கள் அவர்களை இந்தக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். கிராமங்கள்தோறும், கிளைகள் அமைக்கவேண்டும். கட்சியின் துணை அமைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி, தமிழர்களுக்கோ, தமிழுக்கோ தொடர்பு இல்லாத கட்சி என்ற எண்ணத்தை உடைத்தெறிய வேண்டும். தேசியக் கட்சியாக இருந்தாலும், மாநில நலனில் நாங்கள் அக்கறை செலுத்துவோம். டெல்லி தலைவர்களையும் தமிழகத்துக்கு அழைத்துவந்து மாநாடுகளை நடத்தும் திட்டமும் உள்ளது.’’

‘‘2009-ல் காங்கிரஸில் இணைந்த உங்களுக்கு மிகப் பெரிய பதவி இந்த குறுகிய காலத்தில் கிடைத்துள்ளதே?’’

‘‘கட்சியில் இணைந்து நான்கு ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகத்தான் இருந்தேன். அப்போது இருந்த மாநில தலைவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். அதன் பிறகு தேசிய செயலாளர் பதவி கொடுத்தார்கள். கட்சியில் பணியாற்றும் விதம், கடந்த கால அனுபவங்கள் போன்றவற்றைப் பார்த்துதான் இந்தப் பதவியை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வழங்கியுள்ளார்கள்.’’

‘‘கோஷ்டிகள் அதிகம் உள்ள கட்சி இது. நீங்கள் தலைவராகக் கூடாது என இளங்கோவன் விமர்சனம் செய்தார். எப்படி இந்தக் கட்சியில் சிறப்பாக செயல்பட முடியும்?’’

‘‘தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டபோது, கட்சியில் இருந்த முன்னணி தலைவர்கள் அந்தப் பொறுப்புக்கு வர ஆசைப்பட்டார்கள். அதை குறை சொல்ல முடியாது.ஆனால், கட்சி முடிவுசெய்து தலைவரை நியமித்த பிறகு அதை குறை சொன்னால்தான் தவறு. என்னை அறிவித்த பிறகு அதே இளங்கோவனும், நானும் ஒன்றாகத்தான் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். கோஷ்டிப் பிரச்னைகள் என் தலைமையில் இருக்காது என்று நம்புகிறேன்.’’

‘‘உங்கள் மீதுதான் ஜெயலலிதாவுக்குக் கோபம் அதிகம் இருக்கும் என்கின்றார்களே?’’

‘‘நான் அப்படி நினைக்கவில்லை. நான் எம்.ஜி.ஆர் பெயரில் கட்சி நடத்தியது அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இன்று நான் தேசிய கட்சியின் மாநில தலைவர். இனி என்மீது வருத்தப்பட ஒன்றும் இல்லை. தனிப்பட்ட முறையில் எங்கள் இருவருக்கும் எந்தச் சண்டையும் இல்லை.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தி.மு.க-வுடன் கூட்டணி வைக்குமா, தனித்துப் போட்டியிடுமா?’’

‘‘சட்டமன்ற தேர்தல் போல உள்ளாட்சி தேர்தலில் பிரித்துக்கொள்ள முடியாது. 20,000-க்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. கூட்டணி சம்பந்தமாகக் கட்சியின் முன்னணி தலைவர்களுடன் பேசி, டெல்லி தலைமையுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவாகும்.’’ டெல்லி ஆலோசனை இல்லாமல் எதுவும் நடக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்