டெல்டா பூமிக்கு விடிவு!

காவிரி மேலாண்மை வாரியம்...வரவேற்பு

டந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வாட்டி வதைத்தெடுத்த காவிரி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய சுமார் 16 லட்சம் ஏக்கர் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடிக்காகவும் 20 மாவட்டங்களை உள்ளடக்கிய குடிநீருக்காகவும் காவிரி தண்ணீர் கோரி, ஆண்டுதோறும் கதவடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் எனப் போராட்டங்கள் நடத்துவதும் நீதிமன்றத்தை நாடுவதும் ஆறாத காயமாகவே இருந்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்புக்காக மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் 17 ஆண்டுகள் காத்திருந்தனர். அந்தத் தீர்ப்பு அரசிதழில் இடம் பெற பல்வேறு போராட்டங்கள்...

இந்த நிலையில் 90 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டால்தான் இந்தத் தீர்ப்பு உயிர் பெறும் என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும்கூட, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், பி.ஜே.பி. அரசுகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இதற்கிடையே காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் கடந்த 15 நாட்களாகக் கலவரம்.

இந்த நிலையில்தான் இன்னும் 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழு அமைக்க வேண்டும் எனவும் 27-ம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கண அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து பேசிய காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன், ‘‘இந்தத் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்கு முறை குழு  எவ்வாறு அமைக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் துல்லியமான வழிகாட்டுதல்கள் மற்றும் வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கு மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதால் குஜராத் - மத்தியப்பிரதேசம் இடையே நதிநீர் பங்கீட்டில் சுமுகமான சூழல் நிலவுகிறது. கிருஷ்ணா மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே நதிநீர் பங்கீடு சுமுகமாக நடக்கிறது. பக்ராநங்கல் அணை மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதால் இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களிடையே நியாயமான நதிநீர் பங்கீடு நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்கு முறை குழு அமைப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது. இது காலதாமதமான உத்தரவுதான் என்றாலும் இப்போதாவது இந்த உத்தரவைப் பிறப்பித்ததை வரவேற்கிறோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்