“காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு! | Kerala Power Minister MM Mani obscene statement - womens protest - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/05/2017)

“காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன” - கம்யூனிஸ்ட் அமைச்சரின் ஆபாச பேச்சு!

‘‘போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், அதிகாரிகள் மற்றும் போலீஸாருடன் சேர்ந்து மது அருந்தினார்கள். காட்டுக்குள் என்னவெல்லாமோ நடந்தன’’ - இப்படிப் பேசியவர், யாரோ நாலாந்தரமான அரசியல்வாதி இல்லை. கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி.

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எம்.மணி. கடந்த 21-ம் தேதி மூணாறு அடிமாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்ப் பெண்களைப் பற்றிக் கொச்சையாகப் பேச, மூணாறு நகரே கொந்தளித்திருக்கிறது. ‘பெண்கள் ஒற்றுமை’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோமதி அகஸ்டினைக் குறிவைத்து, அமைச்சர் மணி தரக்குறைவாகப் பேசியதற்குப் பின்னணி என்ன?

இடுக்கி மாவட்டத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதம் பேர் தமிழ்ப் பெண்கள். இங்கு உள்ள தேயிலைத் தோட்டங்களை `கண்ணன் தேவன் டீ’ நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. தேயிலைத் தோட்டங்களில் சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கங்களைத் தாண்டி எதுவும் நடக்காது.

கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை, தினமும் 21 கிலோ தேயிலை பறித்தால் 232 ரூபாய் தினக்கூலியாகக் கிடைக்கும். இந்தக் கூலியை உயர்த்த வேண்டி பல ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஒருகட்டத்தில் தொழிற்சங்கங்களை நம்பாமல் பெண்களே வீதியில் இறங்கியது தொழிற்சங்க நிர்வாகி களுக்குப் பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. அப்போது, உருவானதுதான் ‘பெண்கள் ஒற்றுமை’ அமைப்பு. கிடுகிடுக்க வைத்த பெண்கள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு குவிந்தது. வேறு வழி இல்லாமல் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தது நிர்வாகம். தினமும் 500 ரூபாய் சம்பளம், அதிகப்படியாகக் கொழுந்து பறித்தால் அதற்கேற்ப சம்பளம், போனஸ் உள்ளிட்ட வசதிகள் கிடைத்தன.

இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்தான் கோமதி. இதனால் புகழ்பெற்ற கோமதி, உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு நல்லதண்ணி கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக ஆனார். ‘தொழிற்சங்க நிர்வாகியானால் தோட்டத் தொழிலாளிகளுக்காகப் பேச வாய்ப்பு கிடைக்கும்’ என நினைத்து மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் கோமதி. ஆனால், கோமதியை டம்மியாகவே வைத்திருந்தனர் கட்சியினர். பொறுத்துப் பார்த்த கோமதி, மூன்று வாரங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார். அதன்பிறகுதான் மணி இப்படித் தரக்குறைவாகப் பேசினார்.

பொங்கி எழுந்த ‘பெண்கள் ஒற்றுமை’ அமைப்பினர், ‘அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்காக மூணாறில் கோமதி, ராஜேஸ்வரி, கௌசல்யா என்ற மூன்று பெண்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க