சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி! | Special Story about Usury Interest in Tamil Nadu - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2017)

சந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி!

ந்துவட்டி கொடுமைக்கு நான்கு உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்! அங்கே நான்கு டெட்பாடிகள் கிடக்க... எடப்பாடிகள் கட் அவுட்டுகளோடு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பட்டினிக்குத் தீனி கெட்டபின்பு ஞானி’ என்பதுபோல நான்கு பேர் பலியான பின்பு, ‘கந்து வட்டிக்காரர்கள்மீது பொதுமக்கள் அளிக்கும் புகாரை ஏற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போலீஸுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. கந்துவட்டியை ஒழிக்க தனிச் சட்டம் இருந்தும் இத்தனைக் காலமும் காவல்துறை எங்கே தூங்கிக் கொண்டிருந்தது?

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் கந்துவட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்குவர ஆரம்பித்திருக்கின்றன. கந்துவட்டி தடுப்புச் சட்டம் அமலில்தான் இருக்கிறதா? தமிழகத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் என்ன மாதிரியான கொடுமைகள் அரங்கேறுகின்றன? ஜூ.வி டீம் களத்தில் திரட்டிய தகவல்கள் இங்கே...


நெல்லை: பீடி வட்டி... பைக் வட்டி!

நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ராக்கெட் வட்டி, பீடி வட்டி, பைக் வட்டி என 20-க்கும் அதிகமான வகைகளில் நெல்லை மாவட்டத்தில் வட்டித் தொழில் நடக்கிறது. இசக்கிமுத்து குடும்பம் பலியானதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இதுவரை 246 கந்துவட்டி வழக்குகள் பதிவானதை வைத்தே திருநெல்வேலி மாவட்டத்தின் தலையெழுத்தைத் தெரிந்துகொள்ளலாம். சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுடலையாண்டி,  கோமதிசங்கர் என்பவரிடம் 2,000 ஆயிரம் ரூபாய் வார வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார். மூன்று மாதத் தொகை நிலுவையாகிவிட அவரைக் கட்டிவைத்து அடித்ததில், குடல் பாதிக்கப்பட்டதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 23 நாள்கள் அனுமதிக்கப்பட்டு இரண்டு அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. இதுபற்றி புகார் அளித்தும் சாதாரண வழக்கு மட்டுமே பதிவானது. சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த குற்றவாளிகள், இப்போதும் சுடலையாண்டியை மிரட்டுகிறார்கள். அவரது குழந்தையைப் பள்ளிக்கூடத்துக்கே சென்று மிரட்டியுள்ளனர். இதனால் பாதுகாப்புக் கோரி கலெக்டரிடம் மனு அளித்திருக்கிறார் சுடலையாண்டி.

மேலப்பாளையம் அருகே ஆரைக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற மரம் வெட்டும் தொழிலாளி, ராமச்சந்திரன் என்பவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதற்காக, 18,500 ரூபாய் திருப்பிச் செலுத்திய நிலையில், ‘வரும் ஜனவரி மாதத்துக்குள் 15,000 ரூபாயைத் திருப்பிச் செலுத்த வேண்டும்’ என போலீஸார் எழுதி வாங்கினார்கள். கந்துவட்டி கொடுமைமீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறது போலீஸ்.