விண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்

வாழ்க்கை என்பது லைக்... ஷேர்... கமென்ட் மட்டுமல்ல!

ழக்கம்போல  வலைதளப் பக்கங்களில் மட்டும்கொதித்துக் கொண்டிருக்கின்றோம் நாம்.

‘மெர்சல்’ பிரச்னையில் சகட்டுமேனிக்கு அரசியல் கட்சிகளையும் அதன் அங்கத்தினரையும் சோஷியல் மீடியாவில் காட்சிப் பொருளாக்கிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டபோது அதற்கான சாதக பாதகங்களை ஆராய்ந்து, அதற்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்போம்? உங்களுடைய பிரச்னை ஜி.எஸ்.டி-யா... விஜய்க்கு எதிரான நடவடிக்கையா? ஜி.எஸ்.டி-தான் எனில் அன்றே உங்கள் குரல் ஓங்கி ஒலித்திருக்க வேண்டுமே! இப்போது அணி சேர்ந்து நிற்க வேண்டிய தலையாயப் பிரச்னை எது? விஜய்க்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர் அமைதி காக்கிறார். இன்றைய தமிழகத்தில் புரட்சி என்பது, கணினிப் பெட்டிக்குள் அடங்கிவிடும் விஷயம்.

ஒரு மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்தாலோ, நம் உறவினருக்கே அது நிகழ்ந்தாலோ அடுத்தது என்ன செய்வது என்பது தெரியுமா? ஃபேஸ்புக்கில் சேரும் கூட்டத்தை ஒரு பிரச்னைக்காகப் பொதுவெளியில் கூட்ட முடியுமா? ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு விதிவிலக்கு.

இரண்டு ‘எஸ்’கள் இணைந்தும் இன்னும் தமிழக அவலங்கள் தீரவில்லை. டெங்குவைவிட டெல்லியின் உத்தரவுகளே அவர்களுக்கு வேதவாக்கு. ஒதுக்கப்பட்ட நிதிகள் ஒன்றுமில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரு மருத்துவராகக் கூடிய திறமைசாலியைத் தீக்குத் தின்னக் கொடுத்தாயிற்று. டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கூடம், காற்றாடிக் கிடக்கிறது. வேலைவாய்ப்புகள் இல்லை; வருமானமில்லை; நல்ல கல்வியும் இல்லை. இத்தனை ‘இல்லைகள்’ இருந்தும் இறங்கிப் போராட நம்மிடம் துணிச்சலும் இல்லை என்பதுதான் ஆகப் பெரிய வேதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick