கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்! | kirukku rajakkalin kathai - A Story of Doosh kings - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முகில்

ஒரு பேரரசின் இளவரசராகப் பிறப்பது எவ்வளவு பெரிய விஷயம்! சில பல கொலை முயற்சிகளில் சிக்காமல் தப்பினால்... சில பல கொலைகளைப் பிசகின்றி நிகழ்த்தினால் போதும். ராஜ வாழ்க்கை, மிதமிஞ்சிய அதிகாரம், பூலோகத்திலேயே சொர்க்கத்தின் சுகம், சொகுசு, உல்லாசம்... என எல்லாம் வாய்க்கலாம். அரியணை ஏறுவது என்பது மியூஸிகல் சேர் விளையாட்டுப்போல. ஆனால், இதில் ஒரே ஒரு நாற்காலிதான் உண்டு. அதில் வீற்றிருக்கும் அரசன் செத்து விழுந்தபின், அல்லது சாகடிக்கப்பட்டபின், மற்றவர்கள் பதவிவெறியுடன் அதை நோக்கி ஓடுவார்கள். உடன் ஓடி வருபவர்களையெல்லாம் கொன்று, வென்று, எவன் சென்று நாற்காலியில் அமருகிறானோ, அவனே அடுத்த அரசன். இந்த மியூஸிகல் சேரில் இசை என்பது வீழ்த்தப்பட்டவர் களின் மரண ஓலமே. ரத்தப் பிசுபிசுப்புடன் கூடிய அந்த அரியணையில் ஏறியவனும் எந்தக் கணத்திலும் வீழ்த்தப்படலாம் என்பதே இந்த அரசியல் விளையாட்டின் தீரா சுவாரஸியம்.

துருக்கியின் ஒட்டோமான் பேரரசின் அரியணை அப்போது காலியானது. துருக்கி சுல்தான் முதலாம் அகமது, கி.பி.1617, நவம்பர் 22-ம் தேதி இறந்தார். அடுத்த சுல்தானாகப் பதவியேற்று மியூஸிகல் சேர் விளையாடியவர்கள்: அகமதுவின் இளைய சகோதரர் முஸ்தபா (சுமார் நான்கு மாதங்கள்), அகமதுவின் மூத்த மகன் இரண்டாம் ஒஸ்மான் (சுமார் நான்கு ஆண்டுகள்), மீண்டும் முஸ்தபா (சுமார் ஒன்றரை ஆண்டுகள்). 1623, செப்டம்பரில் அகமதுவின் மகன்களில் ஒருவனான நான்காம் முராத் என்ற பதினொரு வயது இளவரசன் அரியணை ஏறினான். இத்தனை ஆட்சி மாற்றங்கள். இவற்றுக்கிடையில் சில இளவரசர்களின் கழுத்துகள் நெரிக்கப்பட்டன. (ஆம், கழுத்தை நெரித்துக் கொல்வதே அவர்களது விருப்பத்துக்குரிய கொலை முறை). ராஜ்ஜியத்தை சுல்தான்கள் ஆட்சி செய்தாலும், சுல்தான்களை ஆட்சி செய்தது இஸ்தான்புல் அந்தப்புர கேபினெட்டே. அதில் ஒருத்தி அப்போது அதீத அதிகாரத்துடன் அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள்.

அனாஸ்டாஸியா. கிரேக்கத்தைச் சேர்ந்தவள். பேரரசர் அகமதுவின் அந்தப்புரத்துக்கு அடிமையாக வந்தவள். இஸ்லாமிய மதத்துக்கு மாறி, ‘கோஸெம்’ என்ற பெயர் பெற்றாள். நன்றாகப் பாடுவாள். அவளின் இசையிலும், அவள் மீதான இச்சையிலும் தடுமாறிய அகமது, இதயத்தில் அதிகமாகவே இடம் கொடுத்தார். கோஸெம் அடுத்தடுத்து வாரிசுகளைப் பெற்றுப் போட்டாள். அதில் ஐந்து ஆண் வாரிசுகள். மெஹ்முத், முராத், காஸிம், சுலைமான் மற்றும் இப்ராஹிம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick