கிறுக்கு ராஜாக்களின் கதை! - 26 - இந்த நூற்றாண்டின் இம்சை அரசன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முகில்

துர்க்மெனிஸ்தானின் நிரந்தர அதிபரான சபார்முராத் நியாஸோவ், ஏகாந்தமான பொழுதொன்றில் தன் தேசத்தையே இம்சிக்கும் முடிவொன்றை எடுத்தார். தனது சுயசரிதையை எழுத ஆரம்பித்தார். ‘அது புனித நூல்’ என்று அவரே அறிவித்துக்கொண்டார். ‘ருஹ்நாமா’ (Ruhnama -ஆன்மாவின் புத்தகம்) என்பது தலைப்பு.

நூலின் ஒரு பகுதியாக தனது உன்னத வாழ்க்கைப் போராட்டத்தைப் பொய்களால் கட்டமைத்தார் (இரண்டு அத்தியாயங்களுக்கு முன்பு பார்த்தோம் அல்லவா). தான் துர்க்மெனிஸ்தானின் முதல் அதிபராக, தேசத்தின் தந்தையாக வளர்ந்த புரட்சி வரலாற்றை ‘மானே, தேனே’  சேர்த்துப் பிசைந்தார். வரலாற்றில் இல்லாதவற்றைப்  புனைந்தார்.

இவை தவிர, அரசின் கொள்கைகளையும் மதக்கோட்பாடுகளையும் அடிக்கோடிட்டு அந்த நூல் விளக்கியது. தேசத்தின் கலை, இலக்கியச் செழிப்பைக் கட்டம்போட்டுக் காட்டியது. ‘ஒரு துர்க்மெனியன் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும், எவ்வளவு சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் நீட்டி முழக்கியது.

அதில் கதைகள் இருந்தன. தத்துவங்கள் ததும்பின. சூஃபி கவிதைகள் மிளிர்ந்தன. (சூஃபி கவிஞர் பைராகி என்பவர் நியாஸோவுக்காகத் தித்திக்கும், தேன்சொட்டும் கவிதைகள் சிந்தினார்.) கடவுள் தன்முன் தோன்றி, தேவதூதனான தன்னிடம் சொல்லச் சொல்ல நூலின் சில பகுதிகளை எழுதியதாகக் கூச்சமின்றிச் சொன்னார் நியாஸோவ். இதுவே, இனிமேல் துர்க்மெனியர்களின் ஆன்மிக வழிகாட்டி என்று பிரகடனமும் செய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!