மிரட்டிய டிரோன்... பறந்த பலூன் - விடாது கறுப்பு!

வம்பர் முதல் வாரத்தில் ஒரு திருமணத்துக் காகவும், கருணாநிதியைப் பார்க்கவும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சாந்தோம் நெடுஞ்சாலையிலும் கோபாலபுரத்தி லும் ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். கார் கதவைத் திறந்து, எழுந்து நின்று உற்சாகமாக அவர்களைப் பார்த்துக் கையசைத்தார் மோடி. ஐந்தே மாதங்களில் நிலைமை மாறிவிட்டது. #GoBackModi என்ற ஹேஷ்டேக், உலக அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடிக்க, சாலைகளைத் தவிர்த்து வானத்திலேயே வந்துபோயிருக்கிறார் மோடி. காவிரிப் போராட்டம் அந்த அளவுக்குக் கொதிநிலையைக் கூட்டிவிட்டது.

டிரோன் தேடல்!


பிரதமர் வருவதற்கு முந்தைய நாள் மத்திய உளவுத்துறையான ஐ.பி அதிகாரிகள் பதற்றத்துடன் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டனர். ‘சென்னைக்குள் பிரதமர் எங்கும் சாலையில் வரவில்லை என்பதால், வானத்தில் கறுப்புக்கொடி காட்டப் போகிறார்கள். ஆளில்லாமல் ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன் விமானங்களில் கறுப்புக்கொடி கட்டிச் சில அமைப்புகள் பறக்கவிடத் திட்டமிட்டுள்ளன. மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் பிறகு மதியம் அடையாறிலும் பிரதமர் இறங்கும் நேரத்தில் இதைச் செய்யப் போகிறார்கள்’ என்ற தகவலை அவர்கள் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே சென்னை வந்திருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்புப்படை அதிகாரிகள் 32 பேர், விமான நிலையத்திலும் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வளாகங்க ளிலும் கண்காணிப்பைத் தீவிரமாக்கினர்.

இன்னொரு பக்கம் சென்னை போலீஸாரும் உஷார் செய்யப்பட்டனர். ‘டிரோன் மூலம் வானத்தில் கறுப்புக்கொடி காட்டும் திட்டம் உள்ளதா?’ எனப் பல அமைப்புகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். சென்னையில் டிரோன் பறக்க விடுவதற்கு அனுமதி இல்லை. ‘இதைமீறி யாராவது பறக்கவிட்டால் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் தாம்பரம் விமானப்படை விமானத் தளத்திலும் வான்வழிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகளிடம் கேட்டனர். ‘டிரோன்கள் ரேடாரில் தெரியாது. அதனால் கண்டுபிடிப்பது சிரமம்’ என அவர்கள் கைவிரித்துவிட்டனர். அதனால் டென்ஷனுடன் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். ஆனால், பலூன் வடிவில் வந்தது போராட்டம்.