கழுகார் பதில்கள்!

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலேயே இருக்கிறதே... யார் காரணம்?


உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தைரியம் இல்லாத மாநில அரசுதான் காரணம்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

தமிழ்நாட்டில் இப்போதும் காமராஜர், ஜீவா போன்றவர்கள் இருக்கிறார்களா?


இன்னமும் இருக்கிறார்கள். இன்று நல்லவர்கள் தலைமறைவாக வாழ்கிறார்கள். அவர்களை இந்தச் சமூகத்தின் கண்களுக்குத்தான் அடையாளம் தெரிவ தில்லை. சமூகத்தின் நோக்கமும் லட்சியமும் மாறிவிட்டதால், தாங்கள் மறைந்து வாழ்வதுதான் நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.


தேச நலன் கருதி அந்தக் காலத்தில் சிறை சென்றவர்களுக்கும் இன்று சிறை செல்லும் அரசியல்வாதிகளுக்கும் வேறுபாடு என்ன?


அன்று தேசபக்திதான் அரசியல்வாதிகளுக்குப் பிரதானம். அன்றைய சித்ரவதைச் சிறைகள் அல்ல இன்றைய சிறைகள். கட்டுமஸ்தான உடம்புடன் உள்ளே போன சுப்பிரமணிய சிவா, நோய்கள் தாக்கி நைந்த உடலோடுதான் வெளியே வந்தார். ஆரோக்கியமற்ற சூழல், உணவு ஆகியவற்றால் அவர்களின் தேசியச் சிந்தனையையே கொன்றது பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால், இன்றைய சிறைகள், சொகுசான இடங்களாக மாறிவிட்டன.

அன்றைய தலைவர்களுக்கு அரசியல் நோக்கங்கள் இல்லை, ‘தேர்தலில் நிற்போம்; சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் செல்வோம்’ என்ற கற்பனைகள் இல்லை. ஆனால், கணக்கு காட்டுவதற்காக இன்றைக்குச் சிறைகளுக்குச் செல்கிறார்கள்.

அந்தக் காலத்தில் போராட்டம் நடத்தினால் எப்போது வெளியே வருவோம் என்றே தெரியாது. எந்த ஊர் சிறையில் வைப்பார்கள் என்றும் தெரியாது. ஆனால், இன்றைய போராட்டங்களின் சிறைவாசம் காலையில் தொடங்கி மாலையில் நிச்சயம் முடிந்துவிடும் என்பதைத் தெரிந்துகொண்டே பலரும் செல்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!