மிஸ்டர் கழுகு: “இந்த நேரத்தில் போகணுமா?”

‘‘டெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். பிரதமரின் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கழுகார் வந்து சேர்ந்தார்.

‘‘சென்னை விமான நிலையப் பகுதியில் கொந்தளிப்பான நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் மோடி வந்து இறங்கினார். அவரை வரவேற்க அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து காத்திருந்தனர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும். சிரித்த முகத்தோடு அவர்கள் இருவரும் மோடியை வரவேற்றனர். ஆனால், எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து வந்த ரிப்போர்ட், மோடியை மூட் அவுட் ஆக்கியிருந்ததாம். வந்தது முதல் சென்னையிலிருந்து புறப்படும் வரை மோடியின் முகம் மிகவும் இறுக்கமாகவே இருந்தது. இப்படி ஒரு வீரியமான போராட்டத்தைப் பிரதமர் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான போராட்டங்களாக இருக்கும் என்றுதான் அவர் நினைத்துள்ளார். கடந்த வாரம், மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்திருப்பது பற்றி ஏற்கெனவே உமக்குச் சொன்னேன் அல்லவா?’’

‘‘‘ஆமாம்!’’

‘‘பிரதமரின் பயணம் தள்ளிவைக்கப்பட்டால் நல்லது என்ற தொனியில் மத்திய உளவுத்துறையின் அறிக்கை கடந்த வாரம் போனது. பிறகுதான், தமிழகத்தின் சூடான சூழலைப் பிரதமர் உணர்ந்தார். அதன்பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரும் தன் பங்குக்கு சீரியஸை ஏற்றிவிட்டு வந்தார். ‘தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்கள் நடக்கிறதென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?’ என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்க, ‘யாரையும் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாகக் கைது செய்ததாகத் தெரியவில்லை’ என்றார் கவர்னர். ‘முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யாமல் ஒரு மாநில அரசு எப்படி இருக்கமுடியும்?’ என ராஜ்நாத் சிங் அவரிடம் கேட்டுள்ளார். அதன்பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் சார்பில் ஒரு தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டதாம்.’’

‘‘அது என்ன?’’

‘‘மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் மாநில அரசுகள் கவனமாகச் செயல்பட வேண்டும்; அப்படிச் செயல்படாத அரசுகளுக்கு மத்திய உள்துறை சில எச்சரிக்கைகளை விரைவில் செய்யும் என்றதாம் அந்த அறிக்கை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமர் சென்னை போக வேண்டுமா’ என்ற விவாதமும் நடந்தது. ‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டால், அது இந்திய அளவில் பெரிய விவாதமாக ஆகும். அவருக்கும் கட்சிக்கும் தலைகுனிவாக அமையும்’ என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கவில்லையாம்!’’

‘‘என்ன சொன்னாராம் அவர்?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick