நிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்?

“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான், அசோசியேட் பேராசிரியர் பதவிக்கான தகுதியைப் பெறமுடியும். இந்தப் பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கு, சாதாரண அறைகளைத்தான் விடுதியில் ஒதுக்குவார்கள். நிர்மலாதேவிக்கு ஸ்பெஷலாக ஏ.சி அறை ஒதுக்கியுள்ளார்கள். ஒருமுறை இவர் விடுதியில் தங்கியிருந்தபோது, இரவில் காரில் வந்த ஒருவர் இவரை ஏற்றிச்சென்று அதிகாலையில் திரும்பக் கூட்டிவந்து விட்டுள்ளார். அது யாருடைய கார், கூட்டிச் சென்றது யார் என்பதெல்லாம் மர்மமாக உள்ளது. பல ஆண்டுகளாகவே நிர்மலாதேவி மாதிரியானவர்களின் நடமாட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்துவருகிறது. இங்குள்ள விருந்தினர் மாளிகையில், பல நாள்கள் இரவு முழுவதும் கொண்டாட்டம் நடக்கும். உயர்கல்வித் துறை அதிகாரிகளும், ஆளும்கட்சிப் பிரமுகர்களும்கூட இங்கு வந்து செல்வார்கள்’’ என்று குமுறுகிறார்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள்.

“இருட்டிய பின்புதான் கைதாவேன்!”

‘பூட்டை உடைத்து நிர்மலாதேவியை கைதுசெய்யப் போகிறோம்... கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்’ என்று வீட்டு வாசலில் இருந்த செய்தியாளர்களைப் போகச் சொல்லிவிட்டு, மிகவும் பாதுகாப்பாக அவரை ஏப்ரல் 16-ம் தேதி மாலை 7 மணிக்கு அருப்புக்கோட்டை போலீஸ் கைதுசெய்து அழைத்துச் சென்றது. அப்போதே தெரிந்துவிட்டது, மேலிட உத்தரவுகளைக் கேட்டுத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்பது. ‘இருட்டிய பின்புதான் கைதாவேன்’ என்று நிர்மலாதேவி சொன்னதால், அவர் விருப்பப்படியே அழைத்துச் சென்றனர். மதுரை ரோடு, திருச்சுழி ரோடு எனச் சுற்றிவிட்டு அரை மணி நேரம் கழித்துத்தான் காவல் நிலையத்துக்குக் கூட்டி வந்தார்கள். ஏப்ரல் 17-ம் தேதி மதியத்துடன் விசாரணை முடிந்து விட்டது. ஆனாலும், மாலை 6 மணிக்கு சென்னையில் கவர்னர் பிரஸ்மீட் ஆரம்பித்த பிறகுதான், விருதுநகர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவியை அழைத்துச் சென்றனர். அதுவரை, மகளிர் காவல் நிலையத்தின் கதவைப் பூட்டி வைத்துக்கொண்டு, ‘விசாரணை நடக்கிறது’ என்றே சொல்லிக்கொண்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick