ட்ரக்கியோஸ்டமி... பெக் ட்யூப்... கருணாநிதி மெடிக்கல் ரிப்போர்ட்!

செப்டம்பர் 2016-க்கு முன்புவரை தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு மிகப்பெரிய உடல்நலப் பாதிப்புகள் எதுவுமில்லை. 2000 மே மாதத்தில் முதுகுவலிக்காகவும், 2008 மே மாதத்தில் கழுத்துவலிக்காகவும் ஓரிரு நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார். மற்றபடி, உடல்நிலை சரியில்லையென்று அவர் படுத்ததில்லை. உடல் எடையைத் தாங்கும் சக்தி கால்களுக்கு இல்லாமல் போனதால், சில ஆண்டுகளுக்கு முன்பு சக்கர நாற்காலிக்கு மாறினார் கருணாநிதி. அதற்குப் பிறகான பாதிப்புகள்தான், அவரை முழுவதுமாக முடக்கிப்போட்டன. அன்றிலிருந்து இன்றுவரை அந்தப் பாதிப்புகளிலிருந்து மீளமுடியாமல் அவர் தவிக்கிறார்.

2016 செப்டம்பரில் முதல்முறையாக நெஞ்சு சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அந்தப் பிரச்னைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்கவிளைவாக, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய பிரச்னை ஒன்று உருவெடுத்தது. எடுத்துக்கொண்ட மருந்தில் ஒன்று ஒத்துக்கொள்ளாமல் போகவே, ஒவ்வாமை ஏற்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவரின் உடல் முழுவதும் ஒவ்வாமை கொப்புளங்கள் வந்தன. மருத்துவர் கோபால் தலைமையிலான மருத்துவக் குழு அவரைக் கவனித்துக்கொண்டாலும், கொப்புளப் பிரச்னைக்குத் தோல் மருத்துவர் இயேசுதாசன் சிகிச்சை வழங்கினார். அதன்பின் முழுமையாக ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்தக் கொப்புளங்களின் ரணம் வாட்ட, இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அவதிப்பட்டார் கருணாநிதி. படுக்கையில் மாற்றங்கள் செய்தும் அவருக்கு அதே பிரச்னைகள் தொடர, டிசம்பர் ஒன்றாம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரே வாரத்தில் அந்தப் பிரச்னைகள் சரியாகிவிட, வீடு திரும்பினார் கருணாநிதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick