மிஸ்டர் கழுகு: பன்னீர் VS பழனிசாமி... பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்

‘காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்...

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார் அவர். 

புல்லட் பரிமளம், டி.டி.வி.தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச வந்தாரா, அல்லது கொடும்பாவி கொளுத்த வந்தாரா என்பது குறித்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. அ.ம.மு.க-வின் காஞ்சிபுரம் நகரச் செயலாளராக இருந்த இவர், அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர். ஜெயலலிதா காலத்தில் மூன்று முறை பரிமளம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருந்தும், தினகரன் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் மொளச்சூர் பெருமாளுக்கும் பரிமளத்துக்கும் பிரச்னை. கட்சியின் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் முன்னிலையில் மாவட்டச் செயலாளருடன் தகராறு செய்தாராம் பரிமளம். தகவல் தெரிந்து, பரிமளத்தைக் கட்சியிலிருந்து நீக்கினார் தினகரன். அடுத்த நாள் இந்தச் சம்பவம் நடந்தது.

மறுநாள் ஜூலை 30-ம் தேதி காலை 11 மணிக்கு தினகரன், வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றார். அவர், புகார் கொடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போகிறார் என்று கட்சியினர் பேசிக்கொண்டனர். ஆனால் தினகரன், கமிஷனர் ஆபீஸ் போகாமல் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டார். பிறகு வெற்றிவேல் மட்டும் போய், தினகரன் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். இந்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் ‘தேவை இசட் பிளஸ் பாதுகாப்பு..!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. தினகரன் வீட்டு சம்பவத்துக்கும் இந்தக் கோரிக்கைக்கும் முடிச்சுப்போடுகிறது போலீஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick