“எழுந்து வா... தலைவா!”

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே...” - என லட்சோப லட்சம் தொண்டர்களின் இதயங் களிலும் கணீரென ஒலித்துக்கொண் டிருக்கிறது, அந்தக் காந்தக் குரல். ‘எழுந்து வா தலைவா!’ என்று தொண்டர்கள் எழுப்பும் கோஷத்தால், ஆழ்வார்பேட்டையே அலறிக்கொண்டிருக்கிறது. காவேரி மருத்துவமனை முன்பாகக் கதறியபடிச் சுற்றிச்சுற்றி வரும் தொண்டர்களின் கண்கள் சோகத்தைச் சுமந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

“எய்யா... உங்களுக்கு என்னய்யா ஆச்சு? உங்களுக்கு வேணாம்யா இந்த ஊரு. நம்ம கிராமத்துக்கு வந்துருங்கய்யா. சனம் பூரா உங்களுக்காகக் காத்துக் கெடக்குது” என்று திருவாரூரிலிருந்து வந்தி ருந்த ஒரு பாட்டியின் கதறல், அனைவரையும் உலுக்கியது. அவரிடம் பேசினோம்.

“எம்பேரு ஜெயலெட்சுமி. திருவாரூருக்குப் பக்கத்துல மேலவாசல்தான் என் ஊரு. வயசு 62 ஆகிடுச்சுய்யா. கலைஞர் அய்யான்னா எனக்கு அம்புட்டு உசுரு. குடிசையில இருந்த எனக்கு அய்யாதான் வீடு கட்டித்தந்தாரு. எனக்குக் கல்யாணமும் செஞ்சுவெச்சு, குடவாசல் ஒன்றிய மகளிர் அணித் தலைவியாவும் ஆக்குனாரு. நான் கும்புடுற சாமி அய்யாதான். அந்தச் சாமிக்கு இப்புடி ஆகிடுச்சே. என் வீட்டுக்காரருக்கு சுகமில்ல. ஆனாலும், அய்யாவ ஒரு தடவைப் பாத்துடணும்னு புளியோதரை செஞ்சு தூக்குல எடுத்துக்கிட்டு, மாத்துத் துணி எடுத்துக்கிட்டு பஸ் ஏறி வந்துசேந்தேன். அய்யா நல்லபடியா திரும்பி வர்ற வரைக்கும் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று கண்ணீர் வழியப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick