கலைஞர் காலம் - ரவிக்குமார்

மது ஜனநாயகத்தைத் தாங்கியிருக்கும் நான்காவது தூண் என்று பத்திரிகைகளைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதில் கலைஞர் மட்டும் ஒரு விதிவிலக்கு.

கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாள ராகக் கூறிக்கொள்வதில் பெருமைப் படுபவர். பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்துபவர். பத்திரிகையாளர்களை அதிகாலையில் போனில் அழைத்துப் பேசுவார் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கே வாய்க்கும் என நினைத்ததில்லை.

நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை. ஈழத் தமிழ் அகதி முகாம்களின் நிலை குறித்துக் கட்டுரை ஒன்றை ஆனந்த விகடனில் எழுதியிருந்தேன். அதைப் படித்த கலைஞர், அதிகாலையில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ‘‘அகதி முகாம்களைப் பார்வையிட்டு அறிக்கை கொடுங்கள்’’ எனக் கூறினார். அதே பிரச்னையை நான் சட்டமன்றத்திலும் பேசியிருந்தேன் என்றபோதிலும், பத்திரிகையில் வந்ததுதான் அவரது கவனத்தை ஈர்த்தது. அந்தச் சமயத்தில், ஜூனியர் விகடனில் பத்தி எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து எனது கருத்துகளைப் பதிவுசெய்வதாக மட்டுமின்றி, அதை எனது சட்டமன்றப் பணியின் அங்கமாகவும் நான் மாற்றிக்கொண்டேன்.

ஒரு கோரிக்கையைச் சட்டமன்றத்தில் எழுப்பினால், அதுகுறித்து புள்ளிவிவரங்களுடன் ஜூ.வி-யில் கட்டுரையும் எழுதுவேன். அதுவரை கவனிக்கப்படாமல் கிடந்த பிரச்னைகள் குறித்து நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கலைஞர் அதைக் கூர்ந்து கவனிப்பதையும் குறிப்புகள் எடுப்பதையும் நான் பார்த்தேன். பீட்டர் அல்போன்ஸ் போன்ற மூத்த உறுப்பினர்கள் பேசுகிற நேரம், அவையில் அமர்ந்து கவனிக்கும் தலைவர் கலைஞர், நான் பேசுகிற நேரத்தில் அவைக்கு வந்து அமர ஆரம்பித்தார். அது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைத் தந்தது. அமைச் சர்களும், அதிகாரிகளும் எனது கோரிக்கைகளை சீரியஸாக எடுத்துக்கொள்வ தற்கும் அது காரணமானது.

ஜூனியர் விகடனில் நான் கட்டுரைகளின் மூலமாக முன்வைத்த பல கோரிக்கைகள், அரசின் திட்டங்களாக மாறின. அவற்றுள் இரண்டை மட்டும் இங்கே பதிவுசெய்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!