அகம்... புறம்... கோபாலபுரம்!

தமிழ்மகன்

ரசியல் விருப்புவெறுப்புகளைக் கொஞ்சம் ‘சைலன்ட் மோடி’ல் போட்டுவிட்டு அமைதியாகப் பார்த்தால், இந்திய அரசியலில் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பரபரப்பாக இயங்கிய, பன்முகம்கொண்ட ஒரு தலைவரை நினைவு கூர்வீர்கள். நடு வகிடு, கறுப்புக் கண்ணாடி இவற்றுடன் தோளில் ஒரு வேட்டியையே துண்டாகப் போர்த்தியபடி மைக் முன்னால் கர்ஜிக்கும் ஒரு முகம் நினைவுக்கு வரும். அவர்தான், மு.கருணாநிதி. கலைஞர், தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் என அவரது பெயரில் மரியாதை நிமித்தமாக அடைமொழிகள் மாறியபடி இருந்தன.

பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பேச்சால் கட்டிப்போடும் திறமை அவரிடம் இருந்தது. கவிதை, நாடகம், நாவல், கட்டுரை எனக் கவித்துவமான எழுத்து வலிமை இன்னொரு பக்கம். நிர்வாகத்திறன், நினைவாற்றல், அயராத உழைப்பு ஆகியவை அரசியல் களத்தில் அவருக்கு அனுசரணையாக இருந்தன. ஒரு முழுநேர எழுத்தாளரைவிடவும் அதிகமாக எழுதினார். முழுநேரப் பத்திரிகையாளரைவிடவும் அதிக நேரம் பத்திரிகை அலுவலகத்தில் கிடந்தார். முழுநேரச் சினிமாக் கதாசிரியர்களைவிடவும் அதிகமாக வசனம் எழுதினார். பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாநிலத்தின் முதல்வர் எனப் பன்முகம் கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. 

ஐந்து முறை முதல்வர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவர், 50 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர் என எதையும் சாதனையாக நிகழ்த்திக்காட்டியவர். ஒரு சிப்பிக்குள் அடக்க முடியாத முத்து. அகம் புறம் எனப் பேதமில்லாத திறந்த புத்தகமாகத் தமிழ் மக்களுடன் கலந்துவிட்டது இந்த கோபாலபுரத்தாரின் வாழ்க்கை.

ஒவ்வொரு துறையிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!