மெரினா தடை... தகர்ந்த கதை! | Karunanidhi Burial at Marina Beach issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/08/2018)

மெரினா தடை... தகர்ந்த கதை!

ந்தியாவின் தலைநகர் டெல்லியை ‘சமாதிகளின் பூமி’ என்று வரலாற்றாய் வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மெரினா கடற்கரை ‘திராவிட அரசியலின் நினைவு பூமி’ என்ற சிறப்பைப் பெற்றுவிட்டது. திராவிட அரசியலை முன்னெடுத்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டத்தை மெரினா அடைவதற்குப் பல சித்தாந்தத் தடைகள், அரசியல் காரணங்கள், சட்டத்தின் பெயரில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. அத்தனையையும் நீதிமன்றத்தில் உடைத்தது தி.மு.க வழக்கறிஞர் பிரிவு.

ஆகஸ்ட் 7-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி மரணமடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, மெரினாவில் இடம் கேட்டு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க குழு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது. அதற்கு முன்பே, கருணாநிதியை மருத்துவமனையில் பார்க்க வந்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரிடம் இதுபற்றி தி.மு.க சார்பில் பேசப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் பயன்படவில்லை. 7-ம் தேதி இரவு, தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் மறுக்கப்பட்டிருந்தது. 

கருணாநிதிக்கு மெரினா இடம் மறுக்கப்பட்டபோது, தி.மு.க தொண்டர்கள் அத்தனைபேரின் கோபமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்தான் திரும்பியது. அவரைத் திட்டி கோஷம் போடாத தி.மு.க தொண்டர் ஒருவர்கூட பாக்கி இல்லை. உண்மையில், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த எண்ணம் சுத்தமாக இல்லை என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். ‘கருணாநிதிக்கு இடம் கொடுக்கக் கூடாது’ என டெல்லி யிலிருந்தும், தன் அமைச்சரவை சகாக்கள் சிலரிடமிருந்தும் எடப்பாடிக்கு நிர்பந்தங்களும் எச்சரிக்கைகளும் இருந்தன என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இந்தத் தடைகளை வெளிப்படையாக எடப்பாடியால் உடைக்க முடியவில்லை. அதனால், நீதிமன்றத்தின் பக்கம் பந்தைத் திருப்பிவிட்டு, தி.மு.க-வை வைத்தே உடைக்க வைத்தார். ‘‘தடை உடைபட்ட பிறகு, தமிழக அரசு மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றம் போகாததற்கு அதுதான் காரணம்’’ என்கிறார்கள் அவர்கள்.