காவேரியில் கடைசிப் போராட்டம்!

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட முதல் நாள் தொடங்கி 11-ம் நாள் வரை, ஏறி இறங்கியது அவரது ‘பல்ஸ் ரேட்’ மட்டுமல்ல... ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நாடித் துடிப்பும்தான்.

அனுமதிக்கப்பட்டது முதலே அவரது உடல்நிலையில் முன்னேற்றம், பின்னடைவு என இரண்டும் மாறி மாறி இருந்தன. மஞ்சள்காமாலை இருப்பது உறுதி செய்யப்பட்டபோதே, அவரது உடல்நிலை மீண்டு வருவது கடினம் என்பதை உணர்ந்துவிட்டனர். ஆகஸ்ட் 4-ம் தேதி காலை கல்லீரல் சிறப்பு மருத்துவர் முகமது ரெலா கருணாநிதியின் உடல்நிலையைப் பார்த்துவிட்டு, ‘அவருக்கு இனி மருந்துகள் தந்தால், அதை உடல் ஏற்பதிலும் சிரமம் ஏற்படலாம்’ என்று சொன்னார். ஆகஸ்ட் 5-ம் தேதி வழக்கமாக நடத்தப்படும் சோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டபோது, அவரது கல்லீரல் செயல்பாடு முடங்கியது தெரியவந்தது. அதேபோல், சிறுநீரகத்தின் செயல்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது.

ஆகஸ்ட் 6-ம் தேதி கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகிக்கொண்டே வந்தது. அன்று காலையே கருணாநிதியின் உறவுகள் எல்லாம் காவேரியில் முகாமிட்டிருந்த நிலையில், தயாளு அம்மாளையும் கடைசியாகப் பார்க்க வைத்துவிடலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் முடிவுசெய்து, அவரை காவேரிக்கு அழைத்துவந்து, ஐ.சி.யூ-வில் கருணாநிதியைக் காணச்செய்தனர். அன்று மாலை கருணாநிதியின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியது. இதயத்துடிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது. அதன்பிறகுதான், 24 மணி நேரக் கெடுவை மருத்துவமனை தரப்பில் கொடுத்தனர்.

அன்று நள்ளிரவே கருணாநிதியின் இதயத்துடிப்பின் செயல்பாடு நின்று போகும் அளவுக்கு நிலை இருந்துள்ளது. ஆனால், கடைசிக்கட்ட முயற்சிகளைச் செய்து, இதயத்துடிப்பைத் தொடர்ந்து இயங்கவைத்தனர். ஆனால், 7-ம் தேதி காலை நிலவரம் மீண்டும் மோசமாகவே, ‘மருத்துவ அறிக்கை வெளியிடலாம்’ என்று காவேரி மருத்துவமனை தரப்பில் கேட்டார்கள். ஆனால், கருணாநிதி உறவுகள் அப்போது வேண்டாம் என்று மறுத்துள்ளனர். அன்று காலை கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவருக்கும், ‘கருணாநிதியின் இறுதி நிமிடங்கள் எண்ணப்படுகின்றன’ என்ற தகவல் சொல்லப் பட்டது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் ஆஜராகினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!