“இளமையிலேயே கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்!” | Karunanidhi's school friend Ramadoss talks about Karunanidhi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/08/2018)

“இளமையிலேயே கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்!”

உருகும் தோழர் எண்கண் இராமதாஸ்

‘‘பள்ளியில் தமிழ் மாணவர் மன்றம் அமைத்து, அதன் தலைவராக இருந்தார் கருணாநிதி. அவருக்கு, சிறந்த ஆளுமைத் திறன் இருந்தது. அதனால், அவரை சக மாணவர்களான நாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டோம். ஒருமுறை பள்ளி ஆண்டு விழாவுக்கு, அப்போது ஜில்லா போர்டு தலைவராக இருந்த நாடிமுத்தாப் பிள்ளை தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் ‘நட்பு’ என்ற தலைப்பில் கருணாநிதி அடுக்கு மொழியில் அருமையாகப் பேசினார். அதைக் கேட்டு மகிழ்ந்த நாடிமுத்தாப் பிள்ளை மீண்டும் ஒருமுறை கருணாநிதியைப் பேசச் சொல்லி ரசித்தது என் நினைவில் பசுமையாக உள்ளது. ‘வணக்கம்... வாழ்க தமிழ்’ என்று பேச்சை ஆரம்பிக்கும் கருணாநிதிக்கு மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் கொட்டும். அவரது பேச்சைக் கேட்க ஒட்டுமொத்த அரங்கமே காத்திருக்கும்’’ என்று நினைவுகளில் மூழ்குகிறார் எண்கண் கிராமத்தைச் சேர்ந்த இராமதாஸ்.

கருணாநிதி தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை திருவாரூர் அருகேயுள்ள தன் சொந்த ஊரான திருக்குவளையில் முடித்தார். உயர்கல்விக்காகத் தாய் அஞ்சுகம் அம்மாளுடன் திருவாரூருக்கு குடிபெயர்ந்தவர், செகண்ட் ஃபார்ம் மற்றும் தேர்டு ஃபார்ம் படிப்பை திருவாரூர் கமலாலயம் தென்கரையில் உள்ள போர்டு ஹைஸ்கூலில் தொடர்ந்தார். (தற்போது அந்தப் பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்றழைக்கப்படுகிறது) அப்போது, கருணாநிதியுடன் இணைந்து படித்தவர் இராமதாஸ். இப்போது இவர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மூலங்குடி கிராமத்தில் உள்ள இளைய மகள் வீட்டில் வசிக்கிறார். இவருக்கு கலா, சகிலா என்ற இரு மகள்கள் உள்ளனர். 2009-ல், மனைவி சுசீலா இறந்துவிட்டார். இந்த வயதிலும் கண்ணாடி அணியாமல் பத்திரிகைகள் வாசிக்கும் இராமதாஸ், இதுவரை ஒரு சினிமாகூட பார்த்ததில்லை என்கிறார். சுமார் 25 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரரான இவர், தீவிர விவசாயி. இப்போதும் சுறுசுறுப்பாய் வேலைகள் செய்கிறார்... சைக்கிள் ஓட்டுகிறார்... தமிழைப் பிசிறில்லாமல் பேசுகிறார். 

அவருடன் உரையாடியதிலிருந்து...