மிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி

பலம் காட்ட களமிறங்கும் வாரிசுகள்

‘‘இடைத்தேர்தல் முதலில் வருமா, உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா?’’ என்று புதிர் போட்டபடி வந்தார் கழுகார்.

‘‘நீரே சொல்லும்!’’ என்றோம்.

‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் ஜெயிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயிப்போம்’ என்று சொல்கிறார். டி.டி.வி.தினகரனும் இதையே சொல்கிறார். கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், திடீரென மறைந்ததாலும் தி.மு.க மட்டும் இன்னும் தேர்தல் பற்றிப் பேசாமல் இருக்கிறது. ஆனால், இடைத்தேர்தல் விஷயத்தில் எல்லோரின் கவனமும் தி.மு.க-மீதுதான் இருக்கிறது.’’

‘‘காரணம்?’’

‘‘திருவாரூர் தொகுதிதான் காரணம். கருணாநிதி மறைவால் காலியாகியிருக்கும் இந்தத் தொகுதியில் அடுத்து நிற்கப்போவது யார் என்பதுதான் தி.மு.க-வில் மட்டுமின்றி, வெளியிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபகாலமாக தி.மு.க மேடைகளில் அதிகம் தென்படும் உதயநிதி ஸ்டாலின், இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பரவலான பேச்சு நிலவுகிறது. ‘தாத்தாவின் தாய்மண்ணிலிருந்து பேரனின் அரசியல் ஆரம்பமாகட்டும்’ என ஸ்டாலின் குடும்பத்தில் சிலர் விரும்புகின்றனர். கருணாநிதி மனதால் நேசித்த தொகுதி இது. தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் ஜெயிக்கலாம் என்ற சூழல் இருந்தபோதுகூட, அவர் தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை இங்கு போட்டியிட்டார். கடந்த தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் ஜெயித்தார். அவர் போட்டியிட்ட தேர்தல்களிலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்ததும் திருவாரூரில்தான். அதனால்தான், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் என்ட்ரியை இங்கிருந்து தொடங்க வேண்டும் எனக் குடும்பத்தில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.’’

‘‘உதயநிதிக்கு அந்த எண்ணம் இருக்கிறதா?’’

‘‘சில மாதங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்புப் பயணம் போனார். அப்போது, திருவாரூரில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று மக்களுடன் இணக்கமாகப் பழகினார். ‘கருணாநிதி இங்கு போட்டியிட்டபோது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், மற்ற கட்சியினரும் அவருக்கு ஓட்டு போட்டார்கள். அவர் மறைவால் காலியாகும் தொகுதியில், அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் நிற்கும்போது, அதே அளவு ஆதரவு கிடைக்கும். முதல் தேர்தலில் இப்படிப் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டால் போதும்... அரசியலில் உதயநிதியை எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும்’ என்கிறார்களாம் உதயநிதியின் அரசியல் வட்டார நண்பர்கள். ஆனால், ஸ்டாலின் குடும்பத்தில் சிலருக்கு ஒரே ஒரு நெருடல் மட்டும் இருக்கிறது. கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை  ஜெயித்திருந்தாலும், தி.மு.க-வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சென்டிமென்ட்டாக அதை ஒரு தடையாகப் பார்க்கிறார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick