கழகத்தின் ஆஸ்தி... குடும்பத்தில் குஸ்தி...

தி.மு.க-வின் சொத்துகள் ஒரு பார்வை

ந்தியாவில் அதிகமான சொத்துகள் வைத்திருக்கும்  கட்சிகளில், தி.மு.க-வும் ஒன்று. கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவரான அழகிரி, கட்சிக்குள் நடத்திக்கொண்டிருக்கும் யுத்தத்தின் பின்னணியில் இருக்கும் காரணங்களில் இந்தச் சொத்துகளும் அடக்கம்!

தி.மு.க., அமைப்புரீதியாக பலம் வாய்ந்தது. அதற்கு நிகராக, அந்தக் கட்சியின் வருமானமும், சொத்துகளும் உள்ளன. தன் சொத்துகளைப் பராமரிப்பதற்காக, ‘சொத்துப் பாதுகாப்புக் குழு’ என்று தனியாக ஒரு நிர்வாகக் குழுவையே வைத்துச் செயல்படும் கட்சி, அநேகமாக இந்தியாவிலேயே தி.மு.க மட்டும்தான். தி.மு.க-வின் சொத்துகள், தி.மு.க அறக்கட்டளையின் சொத்துகள், முரசொலி அறக்கட்டளையின் சொத்துகள் என அந்தக் கட்சியின் சொத்துகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகின்றன. இந்த மூன்றையும் நிர்வாகம் செய்ய, தனித்தனி நிர்வாகக் குழுக்கள்; தனித்தனி ஆடிட்டர்கள்; அவற்றைக் கண்காணிப்பதற்குத் தணிக்கைக் குழுக்கள் என கார்ப்பரேட் கம்பெனிகளைப் போன்ற கட்டமைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க.

அதிகமான சொத்துகளை தன்வசம் வைத்திருக்கும் தி.மு.க அறக்கட்டளையில் மு.க.ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தவிர, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் யாரும் அதில் இல்லை. அதுதான் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் என்று அறிவாலய வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.

இதுபற்றிக் கேள்வி எழுந்தபோது, “அப்படி ஒன்றும் இல்லை” என்று அழகிரி மறுத்தார். ஆனால், அழகிரியின் மகன் துரை தயாநிதி, “பிரச்னைக்கு அது ஒரு காரணமல்ல. ஆனாலும் கட்சியின் சொத்துகள் எவ்வளவு, அறக்கட்டளையின் சொத்துகள் எவ்வளவு, அறக்கட்டளைகளில் யார் யார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற விவரங்கள் வெளிப்படையாக இல்லை. அவை, ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஒரு பிரச்னைதான். அதை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆதங்கப்பட்டுள்ளார்.

சரி, மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தி.மு.க-வின் சொத்துகள்தான் எவ்வளவு, என்கிற தேடலை ஆரம்பித்தோம். ‘தி.மு.க அறக்கட்டளை’ மற்றும் ‘முரசொலி அறக்கட்டளை’யின் சொத்து விவரங்கள் வெளிப்படையாக இல்லை. ஆனால், தி.மு.க கட்சியின் சொத்து விவரங்கள், அவர்கள் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கின் அடிப்படையில் நமக்குக் கிடைத்தன. அந்த விவரங்கள் இங்கே இடம்பெறுகின்றன. சும்மா தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்... அழகிரியின் கோபத்துக்கான காரணம் புரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick