தளபதி to தலைவர்... காத்திருக்கும் தலைவலிகள்!

தி.மு.க பொதுக்குழுதான், அந்தக் கட்சியின்  திசைவழியைத் தீர்மானிக்கும் முக்கியச் செயல்பாடு. கருணாநிதி இருந்தவரை அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியதில்லை. ஆனால், தற்போது நடக்கப்போவது, கருணாநிதி இல்லாத காலத்தில் நடைபெறும் முதல் பொதுக்குழு. கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவரான அழகிரி தன்னைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு பக்கம் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்க, மற்றொரு வாரிசான ஸ்டாலினுக்குத் தலைவர் பட்டம் கட்டப்போகும் இந்தப் பொதுக்குழுவை, அரசியல் களத்தைத் தாண்டி அனைவரும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தள்ளிப்போன பொதுக்குழு!

2016-ம் ஆண்டு நடக்க வேண்டிய தி.மு.க பொதுக்குழு நடக்கவில்லை. காரணம், கருணாநிதிக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால், 2017 ஜனவரி 4-ம் தேதி அது நடைபெற்றது. அதில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின் அப்போது செயல் தலைவர் என்ற பதவியைப் பெற்றார். அத்துடன், அவரிடம் பொருளாளர் பதவியும் இருக்கிறது. 2017-ல் நடக்க வேண்டிய பொதுக்குழுவும் கருணாநிதியின் உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போனது. அது ஆகஸ்ட் 19-ம் தேதி வானகரம் திருமண மண்டபத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் கருணாநிதி உடல்நிலையால் தள்ளிப்போனது. இந்த நிலையில், அவர் மரணத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் 28-ம் தேதி தி.மு.க பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராக ஆவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick