மிஸ்டர் கழுகு: ஆய்வு நாடகம்... “பழி தீர்க்கும் மோடி, கதறித் துடிக்கும் டெல்டா!”

‘கஜா’ புயல் பாதிப்பை மத்திய அரசின் குழு பார்வையிடும் முன்பே பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு, பரபரப்புடன் நுழைந்தார் கழுகார்.

“ ‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு’
- அரசர் என்பவனுக்கு என்ன தகுதி வேண்டும் என்று வள்ளுவர் சொன்னதையும் மறந்துவிட்டார்கள்; டெல்டா மக்களின் கதறலையும் புறம்தள்ளி விட்டார்கள். சோறுடைத்த சோழ நாட்டின் மக்கள், இப்போது சோற்றுக்குக் கையேந்தி நிற்கிறார்கள்” என்று படபடத்த கழுகாரிடம், “புயல் கடந்து பத்து நாள்கள் தாண்டிவிட்டன. இப்போது நிலைமை என்ன?” என்றோம்.

“நிவாரணப் பணிகளில் தமிழக அரசு வேகம் காட்டிவருவதாகச் சொல்கிறார்கள். நகர்ப் பகுதிகளில் ஓரளவு நிவாரணப் பணிகள் நடக்கின்றன. அங்கு மின்வாரிய ஊழியர்கள் முழுமூச்சாக மின்சாரத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். கிராமப்புறங்களில்தான் நிவாரணப் பணிகள் ஸ்தம்பித்திருக்கின்றன. பல இடங்களில் போக்குவரத்துச் சீராகாமல் இருப்பதால், குக்கிராமங்களுக்குச் செல்வதில் சிக்கல் உள்ளது. தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் களத்தில் நிற்கிறார்கள். அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பே நிவாரண நிதிதான். அழிந்துபோன தங்கள் வாழ்வாதாரத்தை அரசாங்கம் தரும் பணத்தை வைத்துதான் கட்டியெழுப்ப முடியும் என்கிற நிலையில் பல குடும்பங்கள் உள்ளன.”

“மத்திய அரசிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண நிதி கேட்டிருக்கிறாரே?”

“அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என்று மாநில அரசின் தரப்பில் மக்களிடம் வாக்குறுதி கொடுக்கிறார்கள். தமிழக அரசு, ரூ.15,000 கோடி நிவாரண நிதி கேட்டுள்ளது. ஆனால், இடைக்கால நிவாரண நிதியைக்கூட கடந்த 26-ம் தேதி இரவு வரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மேலும், ‘நிபுணர் குழு, என்னதான் அறிக்கை கொடுத்தாலும் சொற்பத் தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்கும்’ என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமான அதிகாரிகள். மாநில அரசு பெயர் வாங்கக் கூடாது என்பதைவிட, அ.தி.மு.க அரசு கெட்டப் பெயர் வாங்க வேண்டும் என்று நினைக்கிறதாம் டெல்லி மேலிடம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick