‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’ | EPS and OPS visit to Gaja cyclone affected area - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘‘காலையிலிருந்து பட்டினி... இதுக்கா வந்தார் எடப்பாடி?’’

நாகை மாவட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கடந்த 20-ம் தேதி ஹெலிகாப்டரில் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாதியில் திரும்பினார். அடுத்து 28-ம் தேதி அதிகாலையிலேயே ரயில் மூலம் நாகை வந்தார். முதல்வரின் வருகையையொட்டி முதல் நாள் இரவே, நாகை ஒன்றிய அலுவலகத்துக்குப் புயலால் பாதிக்கப்பட்ட 100 பெண்களை அழைத்துவந்து தங்கவைத்திருந்தார்கள். அவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட 27 அத்தியாவசியப் பொருள்களை வழங்கி முதல்வர் தனது பயணத்தைத் தொடங்கினார். உடன் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வந்தார்.

நாகப்பட்டினம் - வேதாரண்யம் சாலையில் பிரதாமராமபுரம் கிராமத்தில், விழுந்துகிடந்த மரங்களை இருவரும் பார்வையிட்டனர். பின்பு விழுந்தமாவடி வந்தவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பம்பை அடித்து, தண்ணீரைக் குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார்கள். வேட்டைக்காரனிருப்பு பேரிடர் புயல் மையத்தை முதல்வர் வருகைக்காக அவசரமாகச் சுத்தப்படுத்தியிருந்தார்கள். அங்கு மக்களுக்கு முதல்வர் கையால் அளிப்பதற்காக, காலை 8 மணிக்கே பொங்கலும் சட்னியும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், முதல்வர் வருகை தாமதமானது. அதனால், முதல்வர் மதியம் வரும்வரை அவர்களுக்கு உணவு அளிக்காமல் பட்டினியாக காத்திருக்க வைத்தனர் அதிகாரிகள். அங்கிருந்த பெண்கள், “காலையில இருந்து தண்ணி கூட குடிக்கல. கண் முன்னாடி டிபன் இருந்தும் குழந்தைக்குக்கூட கொடுக்க முடியாதுன்னுட்டாங்க... எங்களைப் பட்டினி போடுறதுக்காகவா முதல்வர் வந்தார்?” என்று கொந்தளித்தார்கள். முதல்வர் மதியம் 1 மணிக்கு வந்தபின்பே அவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது. பின்பு நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை உள்ளிட்ட கடலோரக் கிராமங்களைப் பார்வையிட்டார் முதல்வர்.

முதல்வர் வருகையின்போது சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் வரிசையாக நின்று வரவேற்க, நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்த  பெண்கள் அழைத்துவரப்பட்டிருந்தார்கள். அவர்கள் காலை 9 மணியிலிருந்து மதியம் வரை நான்கு மணி நேரம் நிற்க முடியாமல் துவண்டுபோய் சாலையில் அமர்ந்துவிட்டார்கள். ஆனால், காத்திருந்த மக்களைப் பார்த்து ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லாமல் காரில் கடந்துச் சென்றுவிட்டார் முதல்வர். இதனால், கொதிப்படைந்தவர்கள் அங்கேயே சாலைமறியல் செய்தார்கள். போலீஸார், அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick