ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி... | TTV Dinakaran interview about Jayalalitha - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/12/2018)

ஜெ? - ஸ்லோ பாய்சன்... அடுத்த வாரிசு... ஆஸ்திக்கு அதிபதி...

ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் இன்னமும் தனது விசாரணையை முடிக்கவில்லை. கட்சி விவகாரங்களும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எல்லாமே கேள்விகளாகவே இருக்கின்றன. இந்த நிலையில், அ.ம.மு.க கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான தினகரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்ததாகப் பரபரப்பு கிளம்பியதே?”

“ஆயிரம் வதந்திகளைக் கிளப்புகிறார்கள்; அதையெல்லாம் ஆணையம் விசாரிக்கிறது. எல்லாமே உண்மைக்குப் புறம்பான தகவல்கள். அவர் எப்படி மாரடைப்பால் இறந்தார் என்பதை ஆணையத்திடம் அப்போலோ டாக்டர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். எங்களின் பொதுச்செயலாளர் சசிகலாமீது ஏதேதோ குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார்கள். எதுவுமே உண்மையில்லை என்பது ஊர்ஜிதமாகி விட்டது. பொய்களுக்கு நீண்டகாலம் உயிர் இருக்காது.”

“ஜெயலலிதா தனது கடைசிக் காலத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்தவுடன் அரசியலுக்கு முழுக்குப் போடத் தயாராக இருந்தார் என்றும் ஒரு தகவல் வெளியானதே?”

“அதைச் சொன்னவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில், நான் அவருடன் இல்லை. 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, எங்களைக் கட்சியைவிட்டு நீக்கிய பின்பு ஐந்து ஆண்டுகளாக நான் அவரைச் சந்திக்கவே இல்லை. கடைசியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பே, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் அவரைப் பார்த்தேன். இப்படி அவர் யாரிடம் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை.”

“ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார், ஆஸ்திகளுக்கு அதிபதி யார் என்ற கேள்வியும் அதிகமாகக் கேட்கப்படுகிறதே?”

“சொத்துகளுக்கு யார் வாரிசு என்று தெரியவில்லை; அவர் உயில் எதுவும் எழுதி வைத்ததாகவும் தெரியவில்லை. அவர் தனக்கு அரசியல் வாரிசாகவும் யாரையும் அறிவிக்கவில்லை.”

[X] Close

[X] Close