மிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங்! - அணி திரளும் அமைச்சர்கள்

ழையில் நனைந்து வந்திருந்த கழுகார், “நெல் ஜெயராமன் மறைவு, இயற்கை விவசாயத்துக்கே பேரிழப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். கடைசி மூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார். அரசுத் தரப்பிலிருந்து அமைச்சர்கள் போய் மலர்வளையம் வைத்து மரியாதை செய்துள்ளனர். ஆனால், அவரது எண்ணப்படி இயற்கை விவசாயத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று சொன்ன கழுகார், சில நிமிடங்கள் மவுனம் காத்துவிட்டுத் தொடர்ந்தார்.

“சக அமைச்சர்கள் சிலரே தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது தெரிந்து, ஆடிப்போயிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எப்போதும் இல்லாத அளவுக்குச் சாதிரீதியிலான உரசல்கள் அதிகரித்துவிட்டனவாம். சமீபத்தில் முக்குலத்தோர் மற்றும் வன்னியர் சமூகங்களைச் சேர்ந்த சில அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமான பிரமுகர்கள் சிலர், சென்னையில் ஒரு பங்களாவில் சந்தித்தனர். ‘கரன்சி கொட்டும் முக்கியத் துறைகள் எல்லாம், முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களிடம்தான் இருக்கின்றன. இதை இப்படியே விட்டால் நமக்கு எதிர்காலமே இருக்காது’ என்று ஆரம்பித்து, அந்தக் கூட்டத்தில் எதிர்ப்புப் புயல் கடுமையாக வீசியதாம்”

‘‘அடேங்கப்பா!’’

“முதல்வர் மற்றும் அவரின் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களின் கைகள்தான் ஆட்சி பரிபாலனத்தில் ஓங்கியுள்ளதாம். குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூன்று பேரின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. முன்பு தத்தமது துறைகளில் மட்டுமே கோலோச்சிய அவர்கள், இப்போது மற்றவர்களின் துறைகளிலும் தலையிடுகின்றனராம். இந்த அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வலம்வரும் சிலர்தான், மாவட்ட அளவில் நடக்கும் மொத்த ஒப்பந்தப் பணிகள், பணி நியமனங்கள், பணி மாறுதல்களை முடிவு செய்கிறார்களாம். இதற்கு அதிகாரிகளும் முழு அளவில் ஒத்துழைப்புத் தருகிறார்களாம். ‘சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தப் பணிகளில்தான் ஏதாவது தேறும். அதையும்கூட விடாமல் சட்டியை வழித்து எடுத்ததுபோல, கோட்டையிலேயே எல்லாவற்றையும் முடிவுசெய்கிறார்கள். இதனால், வருமானம் போகிறது என்பதுடன் கட்சிக்குள்ளும் சொந்த மாவட்டத்திலுமே மரியாதை இல்லை. நாம் எல்லாம் இந்த இடத்துக்குச் சும்மா வந்துவிடவில்லை. கோடிகளை இறைத்துத்தான் வந்திருக்கிறோம். இந்த ஆட்சி எப்போது கவிழும் என்றே தெரியாத நிலையில், அதையெல்லாம் எப்போது திருப்பியெடுப்பது?’ என்று கொந்தளித்திருக்கிறார்கள்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick