என்ன செய்தார் எம்.பி? - கோ.அரி (அரக்கோணம்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல் சீர்கேட்டின் உச்சம் அரக்கோணம் தொகுதி!

#EnnaSeitharMP
#MyMPsScore

குடிநீர் பயன்பாட்டில் இருக்கிற, உலகின் மிகவும் மாசுபட்ட பத்து நதிகளில் முதலிடம் வகிக்கிறது பாலாறு. வேலூர் மாவட்டம் வழியே செல்லும் பாலாற்றில், சுமார் 800 தோல் தொழிற்சாலைகளின் குரோமியம் கலந்த கழிவுநீர் கலக்கிறது. பாலாற்றில் 617 ஆற்று ஊற்றுக்கால்வாய்கள் இருந்தன. அந்தக் கால்வாய்கள் அனைத்தும்  குரோமியம் கழிவுகளால் அழிந்துவிட்டன. சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) நடத்திய ஆய்வில் கிடைத்தத் தகவல்கள் இவை. இன்னோர் அபாயம்... ராணிப்பேட்டை. இங்கிருக்கும் மூடப்பட்ட தொழிற்சாலையில் மலைபோலக் குவிந்துகிடக்கும் சுமார் இரண்டரை லட்சம் டன் குரோமியம் கழிவுகளால் அந்த நகரமே கிட்டத்தட்ட மக்கள் வாழத் தகுதியில்லாத நரகம்போல மாறிவிட்டது. இதை, ‘மினி போபால்’ என்று எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். இவ்வளவுப் பிரச்னை இருக்கின்றன. என்ன செய்தார் இந்தப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கிய அரகோணம் தொகுதியின் எம்.பி அரி?

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் சுபாஷ், ‘‘சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ‘ரோப் கார்’ திட்டத்தை நிறைவேற்றுவதாக எம்.பி வாக்குறுதி தந்தார். ஆனால், ரோப் கார் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, பாதியில் போட்டுவிட்டார்கள். ‘காவேரிப்பாக்கத்தில் விசைத்தறி பூங்கா கொண்டு வருவேன்’ என்றார் எம்.பி. அதைச் செய்யவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் பல தடுப்பணைகள் கட்டி, உயரத்தையும் அதிகரித்துள்ளனர். ஆந்திர அரசின் அத்துமீறலை எதிர்த்து ஒரு வார்த்தைகூட எம்.பி பேசவில்லை.

ராணிப்பேட்டை நகரம் சுற்றுச்சூழல் சீரழிவின் உச்சத்தில் உள்ளது. இங்கு சூழலைப் பாதுகாக்கச் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான சிறப்புத் தொகுப்பு நிதியை ஒதுக்கக் கேட்டோம். அதையும் அவர் செய்யவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick