ஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிர் மலிவானதா?

கொதிக்கும் மின் ஊழியர்கள்!

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் தாக்குதலில், தென்னை மரங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விழுந்தவை மின் கம்பங்கள். இருண்டுகிடந்த டெல்டா மாவட்டங்களில் மின்சாரத்தை மீட்டெடுக்க, பல மாவட்டங்களிலிருந்தும் ஓடோடிவந்து களமிறங்கினார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மின் ஊழியர்கள். அர்ப்பணிப்பு மிகுந்த இவர்களின் உழைப்புக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

தமிழகம் முழுவதும் சுமார் 15,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எனப்படும் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றிவருகின்றனர். சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் இவர்களை வெறும் ‘அத்தக்கூலிகளாக’ நடத்திவருகிறது மின்வாரியம். மின் கம்பங்கள் நடுவது உட்பட மின்வாரியத்தின் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களின் பணி முக்கியமானது. தானே புயல், வர்தா புயல், சென்னை வெள்ளம், ஓகி புயல் என எல்லா இயற்கைச் சீற்றங்களின்போதும், மின் சீரமைப்புப் பணியில் மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து அளப்பரியப் பணியை இவர்கள் செய்துள்ளனர். இவர்களுக்கு வருகைப்பதிவேடு, அடையாள அட்டை, குறைந்தபட்சக் கூலி என எதுவும் கிடையாது என்பதுதான் சோகம். ஆனால், இவர்களின் உழைப்பை மட்டும் எவ்வித உறுத்தலுமின்றி உறிஞ்சிவருகிறது மின்வாரிய நிர்வாகம். ‘பணி நிரந்தரம் செய்யுங்கள்’ என்ற பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், பல போராட்டங்களில் ஈடுபட்டும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick