மரபணு மாற்ற மனித உற்பத்தி... மனித குலத்துக்கே ஆபத்து!

செயற்கைக் கருத்தரிப்பு தெரியும். அதிலும், ‘உங்களுக்கு சிகப்பான குழந்தை வேண்டுமா? செஸ் வீரனைப் போன்ற புத்திசாலி குழந்தை வேண்டுமா?’ என்றெல்லாம் கேன்வாஸ் செய்யும் அளவுக்கு அந்தத் துறையில் கடும் வர்த்தகப் போட்டி நடக்கிறது. இந்தச் சூழலில், சீனாவில் ஆபத்தான ‘ஜீன் எடிட்டிங்’ (மரபணு மாற்றம்) மூலம் இதைக் கிட்டத்தட்ட செயல்படுத்தியிருக்கிறார் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர். இதுவரை மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் மட்டுமே மனித இனத்துக்கு கேடு விளைவித்துவரும் சூழலில், மரபணு மாற்றப்பட்ட மனித உற்பத்திக்கான ஆராய்ச்சி, மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று உலகம் முழுவதுமுள்ள அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்!  

தாயின் கருத்தரித்த முட்டையில் உள்ள சில மரபணுக்களில் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்தால், நமது தேவைக்கு ஏற்ப குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதுதான் மேற்கண்ட ஆராய்ச்சியின் அடிப்படை. இதைத்தான் சீன அறிவியல் ஆராய்ச்சியாளர் ஹி ஜியான்குய், ஒரு தாயின் கருத்தரித்த முட்டையில் ‘ஜீன் எடிட்டிங்’ செய்து அறிவியல் உலகையே அதிரவைத்துள்ளார். பிறந்து சில நாட்களான லுலு - நானா என்ற பெண் இரட்டையர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படாமல் தடுக்கவே இப்படி அவர் செய்ததாகச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை மருத்துவ உலகம். தனது ஆராய்ச்சியை அவர் நிறுத்திவிட்டதாகச் சொன்னாலும், இதை ஒரு பொறுப்பற்ற, அபாயகரமான செயல் என்று விமர்சித்த சீனாவின் 120 விஞ்ஞானிகள், ஹி ஜியான்குய் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். ஆனால், உடல் ஊனம் உட்பட எந்தக் குறையும் இல்லாத குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக, ‘மனநலம், உடல் குறைபாடுள்ளவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்று 1994-ல் சட்டம் இயற்றிய சீனா, இதையெல்லாம் கண்டுகொள்ளாது என்று சாடுகின்றனர் மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick