“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை!” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...

.தி.மு.க-வில், துணை முதல்வரான பன்னீர்செல்வத்தின் நிலைமை ஊரறிந்த ரகசியம். வெளியேதான் வெள்ளையும் சொள்ளையுமாக வலம்வருகிறாரே தவிர, ஒரே ஒரு ஃபைலைக்கூட அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாத நிலையில் அவர் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில். இந்த நிலையில்தான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பன்னீர்செல்வம், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்! 

அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்றது. அதேநாளில்தான், பி.ஜே.பி-க்கு பின்னடைவை ஏற்படுத்திய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின. கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி நாம் இப்போது யோசிக்கத் தேவையில்லை. 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவோ, நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியோ, இருபது சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறலாம். குறிப்பாக, பூத் கமிட்டிகளை முழுமைப் படுத்துங்கள். பொறுப்பாளர்கள் அனைவரும்,தங்களக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கவனம் செலுத்துங்கள்” என்றார்.

அடுத்ததாக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் பேசிய பேச்சுதான் கட்சிக்குள் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. “தர்ம யுத்தம் முடிந்து போன ஒன்று. ஆனால், இப்போதும் பல மாவட்டங்களில் கட்சிக்குள் தர்மயுத்தம் நடைபெறுகிறது. தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருந்து கட்சியை வலுப்படுத் துங்கள். ஒருவருக்கு ஒரு பதவி என்கிற நிலை, கட்சிக்குள் வர வேண்டும். என்னிடம் அம்மா அளித்த பொருளாளர் பதவியுடன், நீங்கள் எனக்கு வழங்கிய ஒருங்கிணைப் பாளர் பதவியும் உள்ளது. நான் ஒரு பதவியை ராஜினாமா செய்யத் தயார். அப்படி வேறு யாரேனும் ராஜினாமா செய்யத் தயாரா?

டி.டி.வி.தினகரன் நம் கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். ஆனால், அமைச்சர்கள் உட்பட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தினகரனைக் கண்டித்துப் பேசுவதில்லை; இது எனக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எல்லாவற்றையும் விட, கட்சிதான் நமக்கு முக்கியம் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்” என்ற பன்னீர்செல்வம் இறுதியாக, “இன்னொன்றைப் பற்றியும் இங்கு நான் பேச நினைத்தேன். அதை இன்னொரு நாளில் பேசுகிறேன். ஒரேநாளில் அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று பூடகமாகப் பேச்சை முடித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick