மெர்சல் காட்டும் மெக்சிகோ நாயகன்!

மொத்த மெக்சிகோவையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டு வருகிறார் புதிய அதிபர் ‘மக்கள் நாயகன்’ ஆன்ட்ரஸ் மான்வல் லோபெஸ் ஒப்ரடோர். அதிபரின் ஊதியம் 60 சதவிகிதம் வெட்டு, அதிபருக்கான சொகுசு விமானம் விற்பனை, அரசு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏலம், அதிபர் மாளிகையை மக்களுக்கான கலாசார மையமாக மாற்றியது என்று அவர் அரங்கேற்றிவரும் அதிரடிகளால் மெக்சிகோ அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுமே அரண்டுதான் போயிருக்கின்றன!

மெக்சிகோவில் கடந்த 70 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியிருக் கிறார்கள் இடதுசாரிகள். 2006, 2012 ஆகிய ஆண்டுகளில் இருமுறை தோல்வியடைந்த ஓப்ரடோர் தனது மூன்றாவது முயற்சியில், நிறுவனப் புரட்சிகரக் கட்சியை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, அதிபராகியிருக்கிறார். இவர் மெக்சிகோ மாநகரின் முன்னாள் மேயரும்கூட. நடந்துமுடிந்த தேர்தலில் இரு அவைகளிலும் பெரும்பாலான இடங்களை இவரது தலைமை யிலான மொரீனா கூட்டணி கைப்பற்றியதால் ஓப்ரடோருக்கு முழு அதிகாரம் கைவசமாகியி ருக்கிறது.

இதனால் அதிரடி பேர்வழியான இவருக்கு இடதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் எந்தச் சிக்கலும் எழவில்லை. பதவியேற்றச் சில நிமிடங்களிலேயே தனது அதிரடிகளைத் தொடங்கிவிட்டார் ஓப்ரடோர். எளியவராகத் தன்னை முன்னிறுத்திய ஓப்ரடோர், ‘மக்களால் நான்... மக்களுக்கான நான்’ என்கிற பாணியை கையில் எடுத்திருக்கிறார். அதன் முதல் நடவடிக்கையாக அதிபர் மாளிகையை உதறினார். மாளிகையை மெக்சிகோ கலாசார மையமாக மாற்றியவர், அதை மக்களுக்காகத் திறந்துவிட்டார். அதிபருக்கான சிறப்புப் பாதுகாப்புப் படையைக் கலைத்தவர், அதன் வீரர்களைப் பொதுமக்கள் பாதுகாப்புக்குச் செல்ல உத்தரவிட்டார். அதிபருக்கு இருந்த சொகுசு விமானத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டவர், பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்று சொல்லிவிட்டார். கூடவே அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 60 விமானங்களும் 70 ஹெலிகாப்டர்களும் ஏலத்தில் விடப்பட்டு, மக்கள் பணிகளுக்காகப் பணத்தைத் திருப்பிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. தனது ஊதியத்தை 60 சதவிகிதமாகக் குறைத்தவர், முன்னாள் அதிபர்களின் ஓய்வூதியத்தை மொத்தமாக ரத்து செய்துவிட்டார். அரசு அதிகாரிகளுக்கான ஊதியங்களும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ மாநகருக்காக 13 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட விமான நிலையத் திட்டமும் இப்போது தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick