அகதி சூழ் உலகு! - தீர்வு தருமா ஐ.நா உடன்படிக்கை?

சிரிய சிறுவன் அயிலன் குர்டியின் உயிரற்ற உடல், 2015-ல் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கிய காட்சி நினைவு இருக்கிறதா? உலகை உலுக்கியது இந்தப் புகைப்படம். ஆனாலும், இன்றைய தேதிவரை அகதிகள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை. இந்தச் சூழலில்தான், மொரோக்கோ நாட்டில் சமீபத்தில் நடந்த ஐ.நா-வின் பன்னாட்டுக் குடியேற்ற மாநாட்டில், அகதிகளின் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் ‘பாதுகாப்பான, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றத்துக்கான உலகளாவிய வரைவு உடன்படிக்கை’ உருவாக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில், உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 258 மில்லியன் அகதிகளின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்தே அகதிகள் வருகை, உலக நாடுகளின் தீர்க்க முடியாத பிரச்னையாக இருக்கிறது. சமீபகாலமாக அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் இரக்கமற்ற தடுப்பு நடவடிக்கைகளால் இந்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. பருவநிலை மாற்றங்களால் உருவாகியுள்ள பஞ்சம், பட்டினி, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, போர் சூழலால் வாழ்விடங்கள் அழிப்பு, வாழ்வாதார வாய்ப்புகள் பறிப்பு என அகதிகளை உருவாக்கும் காரணிகள் ஏராளம். இந்தப் பிரச்னைகளுக்குத்தான், மேற்கண்ட உடன்படிக்கை தீர்வுகளை முன்வைக்கிறது. மனித உயிர்கள் காப்பாற்றப்படுவது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, சமூகங்களை ஒருங்கிணைப்பது இவையே உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களாகும். அழிவுக்கு வழிவகுக்கும் எல்லைப் பாதுகாப்பு முறைகளைத் தவிர்க்கவும், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்கவும், இதில் வழி செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick