மிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்!

கலிலேயே ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு வந்த கழுகார், ‘‘பயங்கரக் குளிர்... ஆனால், சூடான தகவல்கள் நிறைய இருக்கின்றன’’ என்று கூறியபடி, செய்திகளைக் கொட்டத் தொடங்கினார்.

‘‘குட்கா ஊழல் விசாரணை வேகம் பிடித்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கரை இரண்டு நாளாக சி.பி.ஐ அலுவலகத்துக்கு வரச்சொல்லி, விசாரித்துள்ளனர். விசாரணை கொஞ்சம் கடுமையாகவே இருந்திருக்கும் போல. தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி - விஜயபாஸ்கர் சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போது காரசாரமாக சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, ‘விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினமா செய்வார்’ என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் செய்தி தீயாகப் பரவிவருகிறது.’’

‘‘எளிதில் ராஜினாமா செய்து விடுவாரா... என்ன?’’

‘‘வேறு வழி? சி.பி.ஐ பிரிவைக் கவனிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சி.பி.ஐ இயக்குநர் பொறுப்பு வகிக்கும் நாகேஸ்வர ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் குட்கா வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவசரமாகக்கூடி விவாதித்துள்ளனர். மோடியும் அமித் ஷாவும்கூட இதைப்பற்றி விசாரித்து, வழக்கை வேகப்படுத்த உத்தரவிட்டதாகவும் தகவல்!’’

‘‘அடேங்கப்பா... அதற்கும் அரசியல் பின்னணி இருக்குமே...’’

‘‘கண்டிப்பாக. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள், தமிழகப் பிரச்னைகளுக்காகத் திடீரெனக் குரலை உயர்த்த ஆரம்பித்துள்ளனர். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் பின்னடைவை மனதில் வைத்து அ.தி.மு.க தரப்பில் விமர்சனங்களை வைத்துவருகின்றனர். தம்பிதுரையும் அமைச்சர்களும் பேசியதையெல்லாம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பு எடுத்து, டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்பே, குட்கா வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சரகத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழக அரசின் மேலிடத்தைத் தொடர்புகொண்டு காட்டமாகப் பேசினாராம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick