கழுகார் பதில்கள்! - ஸ்டெர்லைட்... அம்மா வழியில் எடப்பாடி அரசு!

சிவக்குமார்.டி., சீலப்பாடி, திண்டுக்கல்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்துச் சட்டம் இயற்றுவதில் ஆளும் கட்சிக்கு என்ன பிரச்னை?


எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ‘நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு’ என்று நடிப்பதுதான் பிரச்னை. கடந்த காலத்தில் இதே ஆலைக்கு ஜெயலலிதாவும் தடை போட்டார். ஆனால், ஸ்டெர்லைட் தரப்பில் உச்ச நீதிமன்றம் சென்று, ‘100 கோடி ரூபாய் டெபாசிட் செய்தால் ஆலையைத் திறந்துகொள்ளலாம்’ என்று தீர்ப்பு வாங்கினார்கள். ‘மைனர் குஞ்சு ரேஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்’கில் சூழலைக் கெடுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் கிளம்பின. அம்மா வழியிலான எடப்பாடி பழனிசாமி அரசும் அதையேதான் செய்கிறது என்பது பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மூலமாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு என்று சொல்லும் தமிழக அரசு, அதில் உறுதியாக இருந்தால் உடனடியாகச் சட்டத்தை இயற்றித் தடை போடட்டும். அதேசமயம், தமிழகம் முழுக்கவே சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தாக இயங்கிவரும் அனைத்து ஆலைகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில், இப்போது இயற்றப்படும் சட்டமும் கேள்விக்குள்ளாகிவிடும்.

@‘பரங்கிப்பேட்டை’ ஹம்துன் அப்பாஸ், சிங்கப்பூர்.
தி.மு.க-வில் இணைந்திருக்கும் செந்தில்பாலாஜியிடம் கழுகார் ஒரு கேள்வி கேட்க விரும்பினால், ‘யார்தான் அந்த ஸ்லீப்பர் செல், இப்போதாவது சொல்லுங்கள்?’  என்பதாகத்தானே இருக்கும்?


பாவம்... ஸ்லீப்பர் செல்களைத் தட்டி எழுப்பி, ஏன் தூக்கத்தைக் கெடுக்க வேண்டும். ‘கரூர் கன்டெய்னர்கள் என்னவாச்சு?’ என்று வேண்டுமானால், உங்களுக்காகக் கேட்டு வைக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick