அரசுப் பள்ளியில் ஆளும் கட்சிக்காரர் அடாவடி! - கண்டுகொள்வாரா அமைச்சர்?

‘‘அமைச்சரின் பெயரைச் சொல்லி ஆளும் கட்சிப் புள்ளி ஒருவர், ‘இனி நான்தான் இந்தப் பள்ளிக்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்’ என நுழைந்தார். அவர் செய்யும் அராஜகங்களையும் அத்துமீறல்களையும் வெளியில் சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறோம். எங்கள் பள்ளியை எப்படியாவது மீட்டுக்கொடுங்கள்...” – இப்படி ஒரு அழைப்பு சென்னை, அனகாபுத்தூர் பகுதியிலிருந்து நமது அலுவலகத்துக்கு வந்தது.

தொடர்பு கொண்ட நபரைச் சந்தித்தோம். அவருடன் சில பெற்றோர்களும் வந்திருந்தார்கள். “அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்றரை வருடத்துக்கு முன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்ததாக ஒரு கடிதத்தைக் காட்டி, ‘இனி நான்தான் இந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்’ என்றார். அமைச்சரின் சிபாரிசு இருப்பதால், இவர் இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்துவார் என உள்ளூர் மக்கள் நம்பினார்கள். ஆனால், அவரது நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை” என்று கூறிய அவர்கள், முரளிதரனின் செயல்பாடுகளை அடுக்கினார்.

குன்றத்தூர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, பம்மல் போன்ற இடங்களில் இவர் மீது  15-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவர், இந்தப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தார் அப்போது, பள்ளிக்கு அருகே முரளிதரனின் கண் எதிரிலேயே கிணற்றில் விழுந்து அப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் சிறை சென்று, சரியான சாட்சிகள் இல்லாததால் விடுபட்டார் முரளிதரன். பிறகு, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இப்படியான பின்புலம் உள்ள ஒரு நபரை அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக எப்படி நியமித்தார்கள் என்பது தெரிய வில்லை. அவர், சர்வாதிகாரியைப் போல அரசுப் பள்ளியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick