ஹசீனாவா... காலிதாவா? - வங்கதேசத்தில் வாக்குப் போர்!

து தேர்தல் யுத்தக் காலம். வங்கதேசத்தின் தேர்தல் களம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் தீவிர எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியினர் கைது, அடக்குமுறை, அச்சுறுத்தல், கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, அந்நிய சக்திகளின் தலையீடு... இவற்றுக்கு இடையில், வங்கதேசம் 11-வது நாடாளுமன்றத் தேர்தலை வரும் 30-ம் தேதி சந்திக்கவிருக்கிறது. இரு பெண் தலைவர்களின் அரசியல் வாழ்வை நிர்ணயிக்கப்போகும் தேர்தலாக இது இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

நான்காவது முறை ஆட்சிக் கட்டிலில் அமரும் ஆசையுடன், இந்தத் தேர்தலைச் சந்திக்கிறார் வங்கதேசப் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், கல்வி சுகாதார மேம்பாடு, இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் நல்லுறவு, ரோஹிங்கியா அகதிகளுக்கு ஆதரவு, தீவிரவாதத்துக்கு எதிரானவர் என்ற உலக நாடுகளின் பாராட்டு, வலுவிழந்த எதிர்க்கட்சிகள் என அனைத்தும் அவருக்குச் சாதகமான அம்சங்கள்.

பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவர், பேகம் காலிதா ஜியா, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகச் சிறையில் உள்ளார். தலைமை இல்லாத இக்கட்டான சூழலில், அவரது கட்சி, மற்ற கட்சிகளுடன் இணைந்து ‘ஜாடியா ஒக்கியோ முன்னணி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தலைச் சந்திக்கிறது. தேர்தல் நியாயமாக நடக்காது என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலை காலிதாவின் கட்சி புறக்கணித்ததால், எதிர்ப்பே இல்லாமல் மூன்றாவது முறையாகப் பிரதமரானார் ஹசீனா.

அசுர பலத்துடன் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதமருக்கு எதிராக நிறுத்த, எதிர்க்கட்சிகளிடம் தகுதியான வேட்பாளர்கள் கூட இல்லை. சிறைத்தண்டனை பெற்றதால், காலிதாவின் மூன்று வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரது அணியின் 2,000 பேச்சாளர்கள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபடுபவர்கள் மீதான கைது நடவடிக்கை,  கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் அதிக அளவில் நிராகரிக்கப்பட்டது என அரசியல் கெடுபிடிகளால் கூட்டணி நிலைகுலைந்துள்ளது. கூட்டணிக் கட்சியின் தலைவர் கமால் ஹொசைன்கூட இம்முறைப் போட்டியிடவில்லை. அதிக அளவில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், ஜியா கட்சி எட்டுத் தொகுதிகளில் போட்டியிட முடியாமல் போனது. இந்தத் தேர்தலில் தோற்றால், ஜியாவின் அரசியல் வாழ்வு கேள்விக்குறியா கும்.

அசுர பலத்துடன் அவாமி லீக் இருந்தாலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாடு கடத்தப்பட்டது, டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டம் என்ற கருத்துரிமைக் கட்டுப்பாடுச் சட்டம் மூலம் பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க முற்பட்டது, விமர்சகர்கள்மீது பாயும் தேசத்துரோக வழக்குகள் அவரின் சகிப்பின்மைக்கு எடுத்துக்காட்டுகள் என்கின்றன எதிர்க்கட்சிகள்.  அவாமி லீக் கட்சி, குடும்பச் சொத்தாகிவிட்டது என்ற கண்டனக் குரலும் கட்சிக்குள் வலுத்துள்ளது. பாகிஸ்தானும் சீனாவும் ஹசீனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றன. இதுவும் ஹசீனாவைப் பாதிக்கிற அம்சங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick