மிஸ்டர் கழுகு: அல்வா கொடுத்த ‘பக்கோடா’ மோடி!

கோட்டையிலிருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘நான் சொன்னதுபோலவே நடந்ததா?” என்றபடி சிரித்தார். ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடியே கடந்த இதழின் அட்டைப் படத்தை எடுத்துக் காட்டினோம்.

‘‘ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி மறுத்த நிலையில், அவசர அவசரமாக இவர்களே திறந்துவைத்து விட்டார்கள்!”

‘‘இதைத்தான் நீர் சொல்லியிருந்தீரே!”

‘‘ஆமாம்! எப்படியாவது மோடியை வரவைத்து விட பகீரத முயற்சிகளை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் செய்தார்கள். ஆனால் அவர்களது ஆசையில் மொத்தமாக மண் விழுந்துவிட்டது. கடந்த ஏழு மாதங்களாகப் பிரதமரை வரவைப்பதில் குறியாக இருந்தார் எடப்பாடி. 2017 மே 24-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா படத்திறப்பு விழாவிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொள்ளுமாறு’ அழைப்பு விடுத்தார். 2017 ஜூலையில் தேதி கொடுக்குமாறு கேட்டார். ஜூலையில் பிரதமர் தேதி தரவில்லை. பிறகு, டிசம்பரில் தேதி கேட்டார்கள். அதுவும் நடக்க வில்லை. ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரவழைத்து அதையொட்டி ஜெயலலிதா படத்தைத் திறந்து வைக்கக் கேட்டார்கள். அதற்கும் பிரதமர் தரப்பிலிருந்து பதில் இல்லை. இம்மாத இறுதியில் பிரதமர் மோடி, புதுச்சேரி வருவது உறுதியாகி உள்ளது. அந்த நாளிலாவது அவரை சென்னைக்கு அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தார்கள். இலவு காத்த கிளி கதையானதால், ஜெயலலிதா படத்திறப்பை சபாநாயகரை வைத்தே முடித்து விட்டார்கள். அதுவும் மோடி, புதுவை வருவதற்கு முன்பே அந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கிறார்கள்.’’

‘‘பிரதமர் புதுச்சேரி வந்து செல்லும் நாள் வரைகூட ஏன் காத்திருக்கவில்லை?”

‘‘பக்கோடா வேலைவாய்ப்பு கமென்ட்டை வைத்து மோடியை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நேரத்தில், எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் மோடி. ‘ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைப்பதில் தவறு இல்லை’ என்று தமிழக பி.ஜே.பி கருத்து கூறினாலும், டெல்லி பி.ஜே.பி இதனை ரசிக்கவில்லை என்கிறார்கள். இந்த விரிசல் போகப் போக இன்னும் பெரிதாகும்” என்ற கழுகார், ரஜினி மேட்டருக்கு வந்தார். ‘‘ரஜினி மக்கள் மன்ற புதிய நிர்வாகிகள் நியமன விஷயத்தில் திடீர் சுணக்கம் ஏற்படுள்ளதாக மன்றத்தினர் சொல்கிறார்கள்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick