நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்மகன்

வ்வொருவரிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டு வந்தாள் அவள். ‘‘ஐ’ம் ரம்யா.’’ கிளிபோல அனைவரிடமும் அதையே சொன்னாள். கூடவே ஒரு புன்னகை வெகுமதி. தன் கையைக் குலுக்கும்போது ஏதாவது வித்தியாசமாகப் பேசி, அவள் மனதில் இடம் பிடித்துவிட வேண்டும் என வினோத் நினைத்தான். இன்னும் இரண்டு இருக்கை தூரம்தான்.

திருத்தமாக, அழகாக இருந்தாள். கண்ணுக்கு மை, நடுவகிடு, நெற்றியிலே குங்குமத்துக்குக் கீழே சந்தனக் கீற்று, ஜிமிக்கி கம்மல்... எனப் போன தலைமுறை அலங்காரம் மட்டும்தான் குறை. முகம் அடுத்த தலைமுறைக்கானது. இந்த முரட்டுத்தனமான வித்தியாசம் ஒருவகையில் கிளர்ச்சி யூட்டுவதாக இருந்தது. சல்வார் கம்மீஸ் அவளுக்குக் குழந்தைத் தோற்றத்தையே தந்தது.

‘‘ஐ’ம் ரம்யா.’’

‘‘வினோத்... ஓ! வாட் அ சில்! ஃபிரிட்ஜுக்குள்ள இருந்து வர்றீங்களா?’’ எனக் குலுக்கிய கையை உதறினான்.

‘‘என்னாச்சு?’’

‘‘ஐஸ் போல இருக்கு.’’

‘‘நீங்க சொன்னதா?’’ என்றாள் எதிர்பாராத தருணத்தில்.

ஒரு புன்னகைக்குப் பிறகு, அடுத்த இருக்கை பரந்தாமனை நோக்கிப் போனாள். அது மைக்ரோ ஆபீஸ். மொத்தமே 19 பேர்தான். முதலாளி, மேனேஜர், அனிமேட்டர், டிசைனர், அட்டெண்டர் எனச் சின்னக் குழு. ஒரு கட்டடத்தின் முதல் மாடியின் முழுத் தளத்தையும் வாடகைக்கு எடுத்திருந்தார் முத்துராஜா. 34 வயதே ஆன இளம் முதலாளி. அனிமேஷன் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். இந்த 19 பேரில் யாராவது ஒருவர் விலகினால்தான், புதிதாக யாராவது வேலைக்குச் சேர வேண்டும் என்ற கொள்கை வைத்திருப்பவர். போன மாதம் விலகிய ராஜ்குமாருக்குப் பதில் இப்போது ரம்யா. யார் புதிதாகச் சேர்ந்தாலும் அனைவரிடமும் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய இன்னொரு கொள்கை. மற்ற கொள்கைகளை அவ்வப்போது சொல்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick