ராஜு மகாலிங்கம் அதிரடி
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் திடீரென அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பதவிக்குத் தற்போது ரசிகர் மன்ற நிர்வாகியாக இருக்கும் சுதாகர்தான் நியமிக்கப்படுவார் எனப் பேச்சு இருந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி சந்தித்தபோது, அதற்கான ஏற்பாடுகளைக் கச்சிதமாகச் செய்தவர் சுதாகர். அதனால், சுதாகரை அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது. ஆனாலும், ‘சுதாகர் அடிக்கடி டென்ஷனாகிறார்’ என்பதை அறிந்து அன்றாட மன்ற நிர்வாகப் பணிகளை சுதாகரிடமும், அரசியல் திட்ட நகர்வுகளை ராஜுவிடமும் பிரித்து வழங்கியிருக்கிறார் ரஜினி. ‘இருவரும் எனக்கு இரட்டைக் குழல் துப்பாக்கிகள்... இணைந்து செயல்பட்டு மன்றத்தைப் பலப்படுத்துங்கள்’ என ரஜினி கேட்டுக்கொண்டாராம். நிர்வாகிகள் கூட்டங்களை முன்பிருந்தே இருவரும் இணைந்து நடத்துகிறார்கள்.
ராஜு, 42 வயதுக்காரர். தேவகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையில் படித்தவர். திருமணமானவர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 ஆண்டுகள் தலைமை அதிகாரியாகப் பணியாற்றியவர். ரஜினியின் ‘2.0’ படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர். அங்கிருந்தபோதுதான், ரஜினியுடன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் வெளிநாடுகளுக்குப் பயணித்தார். இவரது செயல்பாடுகளை ரஜினி பார்த்தார். அதே நேரத்தில், ரஜினியின் அரசியல் ஆர்வத்தில் ஈடுபாடு காட்டினார் ராஜு. இருவரின் எண்ண ஓட்டங்கள் ஒரே கோணத்தில் இருக்க... இருவரும் கைகோத்தனர்.