ஸ்டிரைக்... உயர்கிறது பஸ் கட்டணம்! | Tamil Nadu Bus Strike - Bus fares will increase - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஸ்டிரைக்... உயர்கிறது பஸ் கட்டணம்!

நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி தீவிரமடைந்தது அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம். சென்னையில் மின்சார ரயில்கள், மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மக்களுக்கு அவதி ஏற்படவே செய்தது. ‘திடீர் ஓட்டுநர்’களால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற பதைபதைப்பு எல்லாருக்கும் இருக்கையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திடீர் ஓட்டுநர் உண்டாக்கிய விபத்து, இருவரின் உயிரைக் குடித்தது. அரசுப் பேருந்து ஊழியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும், இதைப்போன்ற விபத்துகள் மக்களிடம் கோபத்தையும் பயத்தையும் உண்டாக்கின. ‘அன்றாடக் கூலிகளாய் இருக்கும் அப்பாவி மக்களின் பிழைப்புக் கெடுகிறதே; வேறு வழியில் இவர்கள் போராட்டம் நடத்தக்கூடாதா’ என்ற அதிருப்திக்குரலும் வெளிப்பட்டது. இந்தச் சூழலில், திங்களன்று இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், ஊழியர்களின் கோரிக்கைகளைக் கவனிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது; போராட்டத்துக்கு விதித்த தடையைத் திரும்பப்பெற மறுத்தது.

பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்ளும் அரசும், ஊழியர்களும் ஒப்புக்கொள்ளும் பொதுவான உண்மை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அதோகதியில் இருக்கின்றன என்பதுதான். இந்திய அளவில் ஆண்டுதோறும் சாதனைகளுக்காகப் பரிசுபெற்றுவரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தினசரி இயக்கத்துக்கே திண்டாட்டம் போடுகிறது என்பது ஓர் அவலம்தான்! கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகப் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைமை மோசமாக உள்ளது. ரொக்கமாகவும், ஓவர் டிராஃப்ட் முறையிலும் வங்கிகளிடமிருந்தும், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடமிருந்தும், தமிழக அரசிடமிருந்தும் கடன் வாங்கித்தான் இவை சமாளிக்கின்றன. 2017 செப்டம்பர் நிலவரப்படி, இந்தக் கடன் 10,547 கோடி ரூபாய். இதனால், ஊழியர்களுக்கும் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் தரவேண்டிய பணத்தை எடுத்து நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick