மிஸ்டர் கழுகு: திவாகரன் - தினகரன் - விவேக்: முற்றுகிறது முக்கோண மோதல்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: திவாகரன் - தினகரன் - விவேக்: முற்றுகிறது முக்கோண மோதல்!

திகாலையிலேயே மப்ளர் சுற்றிக்கொண்டு வந்திறங்கினார் கழுகார். சூடாக லெமன் டீ கொடுத்து உற்சாகப்படுத்தினோம். ‘‘சென்னைக் குளிரைவிட பெங்களூரில் குளிர் மிக அதிகம்’’ என்றார்.

‘‘பரப்பன அக்ரஹாரா சிறைப்பக்கம் போயிருந்தீரா?’’ என்றோம்.

‘‘ஆமாம். சசிகலா குடும்பத்துக்குள் முக்கோண மோதல் முற்றியிருக்கிறது. அதன் சுவடுகள் எதுவும் தெரியாதபடி அமைதியாக இருக்கிறது அந்தச் சிறைச்சாலை.’’

‘‘யார் யாருக்குள் மோதல்?’’

‘‘தினகரன், விவேக், திவாகரன்... மூன்று பேருக்கும்தான் மோதல். சசிகலா சிறைக்குப் போன நாளிலிருந்தே, ‘குடும்பத்துக்குள் அதிகாரத்தை யார் வசப்படுத்துவது’ என்பதில் மோதல் நடந்துவருகிறது. அரசியலைத் தினகரன் கையிலும், நிதி நிர்வாகத்தை விவேக் கையிலும் கொடுத்துவிட்டுப் போனார் சசிகலா. கோபத்தில் திவாகரன் ஒதுங்கியிருந்தார். என்னதான் அரசியலை அநாயாசமாக டீல் செய்தாலும், நிதி விவகாரத்துக்கு விவேக்கை எதிர்பார்த்திருப்பது தினகரனுக்கு உறுத்தலாகவே இருக்கிறது.   ஆர்.கே. நகர் வெற்றியைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தமாக எல்லா நிர்வாகத்தையும் தன் கைக்குள் கொண்டுவர நினைக்கிறார் தினகரன். இப்போது நடக்கும் மோதலுக்கு இதுதான் காரணம்.’’

‘‘என்ன நடந்தது?’’

‘‘ஆர்.கே. நகரில் வென்றதும் சசிகலாவைப் பார்க்க தினகரன் போனார் அல்லவா? அப்போது சசிகலா மௌன விரதம் இருந்ததாகச் சொல்வது உண்மை இல்லையாம். ஜெயலலிதா மறைந்தபோது, ‘ஒரு வருடத்துக்கு அசைவம் சாப்பிடுவதில்லை’ என சசிகலா விரதம் எடுத்தாராம். அது மட்டும்தான் சிறையில் அவர் கடைப்பிடித்த ஒரே விரதம். ஜெயலலிதா வீடியோவைத் தினகரன் வெளியிட்ட கோபத்தில், தினகரனுடன் பேசப் பிடிக்காமல்தான், ‘மௌன விரதம்’ என்று எழுதிக் காட்டியிருக்கிறார். வெற்றி வீரனாக தான் போனபோது சசிகலா வாழ்த்தவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், பேசியே அவர் கோபத்தைக் கரைத்துவிட்டார் தினகரன். அவர் சார்பில் சென்ற சில வழக்கறிஞர் களும் சேர்ந்து இந்தக் காரியத்தைச் செய்தார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick