கழுகார் பதில்கள்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘சொந்த நாட்டையே, சொந்த மக்களையே அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர்’ என்கிறாரே ரஜினி?

இவ்வளவு கூர்மையாகச் சொன்னவர், அப்படிக் கொள்ளையடிப்பவர்கள் யார் என்றும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும். தி.மு.க-வா, அ.தி.மு.க-வா, காங்கிரஸா, பி.ஜே.பி-யா என்பதை அவர் சொல்லியிருக்கலாம். இந்த நான்கு கட்சிகள்தான் ஆட்சி நாற்காலியில் இருந்தவவை; இருப்பவை. ஆனால், இதைச் சொல்லும் ரஜினியின் துணிச்சலைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். கருணாநிதியை அடிக்கடி சந்தித்தவர், ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழாக்கள் நடத்தியவர், நரசிம்மராவைச் சந்தித்தவர், அத்வானியையும் மோடியையும் நண்பர்களாக ஏற்றுக்கொண்டவர். இப்படிப் பல்வேறு தகுதிகள் கொண்ட ரஜினி, இந்த நாட்டையும் நாட்டு மக்களைக் கொள்ளையடித்தது யார் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் பாராட்டலாம், போற்றலாம்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

2018 அரசியலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்?


ஜோசியம் சொல்ல முடியாது என்றாலும், சில அறிகுறிகள் தெரிகின்றன. 2019-ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல், 2018-ம் ஆண்டு இறுதியிலேயே நடக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம். அதற்கு முன், ரஜினி கட்சி ஆரம்பிக்கலாம். ரஜினியின் கட்சியும் பி.ஜே.பி-யும் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க, பிரிந்த அ.தி.மு.க அணிகள் ஒன்று சேரலாம். மே மாதத்துக்குப் பிறகு ரணகளமாய் பல மாற்றங்கள் இருக்கலாம்.

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

அ.தி.மு.க-வில் குழப்பம் நிலவுவதால், அதைப் பயன்படுத்தி ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டாரே எடப்பாடி பழனிசாமி?

ஓ... இதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறாரா? முதல்வரின் கான்வாய் எவ்வளவு லேட்டாகக் கிளம்பியுள்ளது!

ப.பாலா சத்ரியன், பாகாநத்தம்.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரின் தற்போதைய மனநிலை என்ன?


‘விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும்’ என்று நினைக்கிறார் பன்னீர். ‘பிடித்த இடத்தை விட்டுவிடக்கூடாது’ என்று நினைக்கிறார் எடப்பாடி. ‘இவர்கள் இருவரையும் விட்டுப் பிடிப்போம்’ என்று நினைக்கிறார் தினகரன். இப்போது நடப்பது கண்ணாமூச்சி ஆட்டம்!

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்.

ஜெயலலிதாவின் இறப்பினால், இழப்பினால் விளைந்த ஆதாயம் தி.மு.க-வுக்குக் கிடைக்க இயலாமல் போனதற்கு கருணாநிதியின் உடல்நிலை காரணமாகிவிட்டது என்பது உண்மைதானே?

இதுபோன்ற இயற்கையின் இடர்பாடுகளுக்கு விளக்கங்கள் சொல்லத் தேவையில்லை. ஓர் இடைத்தேர்தல் முடிவை வைத்து இதைத் தீர்மானிக்கவும் முடியாது. இதற்கு முழுமையான விடையைச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்