மிஸ்டர் கழுகு: குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்?

‘‘மீண்டும் ஒருமுறை குட்கா விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார்.

‘‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி அதிரடியாக மாற்றப்பட்டுள் ளாரே... அதைச் சொல்கிறீரா?’’ என்றோம்.

‘‘ஆமாம்! ‘இந்த டிரான்ஸ்ஃபரில் உள்நோக்கம் உள்ளது’ என்று தி.மு.க குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. குட்கா விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மீண்டும் குடைச்சலைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க உள்ளது.’’

‘‘விளக்கமாகச் சொல்லும்...’’

‘‘பான் குட்கா விவகாரத்தில் அடிபடும் முக்கியத் தலைகள் யாரென்று உமக்குத் தெரியாதா? சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரைத்தான் இந்த விவகாரத்தில் தி.மு.க குறிவைக்கிறது. இவர்களுக்கு எதிராக ‘மெட்டீரியல்’ எவிடென்ஸ் வலுவாக உள்ளன. 2016-ம் ஆண்டு, சென்னை அருகே செங்குன்றத்தில் எம்.டி.எம் பான் குட்கா நிறுவனத்தில் வருமானவரித் துறை ரெய்டு நடந்தபோது சிக்கிய டைரி மற்றும் வரவு செலவு லெட்ஜரில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பல போலீஸ் உயரதிகாரிகளின் பதவி விவரங்களும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகையின் அளவும் குறித்துவைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, வருமானவரித் துறை அந்த விவரங்களைத் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து, கடிதமும் எழுதியது. ‘இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தி.மு.க வழக்கு போட்டது. ‘நேர்மையான ஓர் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும்’ என 2017 ஜூலை 28-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரை மாற்றியுள்ளனர்.’’

‘‘எதனால் இந்த மாற்றம்?’’

‘‘குட்கா விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உள்துறைக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து அனைத்தும், வலுவான ஆதாரங்களாக உள்ளன. இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஜெயக்கொடியை வளைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இந்த விவகாரத்தில் யாருக்காவது சலுகை காட்டினால் ஆபத்து என ஜெயக்கொடி கருதினார். அதனால், கறாராக நடந்துகொண்டார். அதன் விளைவாக, அவர் தூக்கியடிக்கப்பட்டார். நில நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் மோகன் பியாரே, இப்போது ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.’’

 ‘‘மோகன் பியாரே எப்படிப்பட்டவராம்?’’

‘‘மோகன் பியாரே, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்கு அறிமுகமானவர். 2014 முதல் 2017 வரை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இருந்தவர். அப்போது இருவருக்கும் நல்ல பழக்கம் உண்டு. ‘அந்தப் பழக்கம், இப்போது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சாதகமாக இருக்குமா’ என்பதைப் போகப் போகத்தான் புரிந்துகொள்ள முடியும். இன்னொரு விஷயம்... இந்த டிரான்ஸ்ஃபர் உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தவர் தலைமைச் செயலாளர்தான். ஆனால், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுப்பில் இருந்த நேரத்தில், அந்தப்பொறுப்பைக் கூடுதலாக வகித்த நிதித்துறைச் செயலாளர் சண்முகம் இந்த டிரான்ஸ்ஃபர் உத்தரவைப் பிறப்பித்தார். இதிலும் உள்நோக்கம் இருப்பதாக தி.மு.க சந்தேகிக்கிறது. அதனால், ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்