நேஷனல் ஹைவே!

டெல்லிவாலா

‘தாஜ்மகாலைப் பார்க்க வராதீங்க!’

மெரிக்காவின் புகழ்பெற்ற சுற்றுலா நிறுவனம் ஒன்று, ‘தாஜ்மகாலைப் பார்க்க விரும்புகிறவர்கள் 2018-ம் ஆண்டில் வர வேண்டாம்’ என அறிவிப்பு கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து உலக சுற்றுலா செல்லும் பலரும், ‘ஃபோடர்ஸ் டிராவல்’ என்ற நிறுவனம் தரும் வழிகாட்டியையே பரிசீலிப்பார்கள். 1937-ம் ஆண்டிலிருந்து இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டியை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களிடம் பதிவுபெற்ற சுற்றுலாப் பயணிகள் 11 லட்சம் பேர்.

தூசு மற்றும் மாசுக்களால் தாஜ்மகாலின் வெண்பளிங்குப் பரப்பு பொலிவிழக்கிறது. பிரத்யேக களிமண் பூச்சு ஒன்றைப் பூசி தாஜ்மகாலை சுத்தம் செய்கிறது, இந்தியத் தொல்லியல் துறை. இந்த ஆண்டு முழுக்க இந்தப்பணி நடைபெற உள்ளது. ‘இதற்காகத் தடுப்புகள் கட்டி பணி செய்வார்கள் என்பதால், தாஜ்மகால் முன் நின்று புகைப்படம் எடுக்கும்போது அழகாகத் தெரியாது’ என்பதே இந்த நிறுவனம் தாஜ்மகாலைத் தவிர்க்கச் சொல்வதற்கான காரணம். ஆனால், ‘‘இந்தப் பணி படிப்படியாகத்தான் நடைபெறும். தாஜ்மகாலின் நான்கு பக்கங்களில் ஏதாவது ஒரு பக்கம்தான் ஒரு நேரத்தில் பணி நடக்கும். மற்ற மூன்று பக்கங்களிலும் தாராளமாக புகைப்படம் எடுக்கலாம். எந்தப் பக்கம் பார்த்தாலும் தாஜ்மகால் அழகுதான். இது தெரியாமல் அமெரிக்க நிறுவனம் இப்படிச் சொல்லியிருக்கிறது. இதனால் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்தும் ஆயிரக்கணக் கானவர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ எனப் புலம்புகிறார்கள் ஆக்ராவாசிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!