மிஸ்டர் கழுகு: காஷ்மீர் மாடலில் ஆட்சி: கவர்னர் கட்டளை... ஸ்டாலின் கர்ஜனை!

‘‘கவர்மென்ட் என்பது ‘கவர்னர்’மென்ட் என்று வேகவேகமாக மாறிக் கொண்டிருக்கிறது’’ என்று சொன்னபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘கிண்டி கவர்னர் மாளிகை மார்க்கமாகப் பறந்து வந்திருக்கிறீர்களா?’’ என வரவேற்புக் கொடுத்தோம்.

‘‘மாநில கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கவர்னர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கவர்னர் மாளிகையை நோக்கி எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முந்தைய கவர்னர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், எப்போதுமே ராஜ்பவனிலிருந்து அறிக்கை வெளியானதில்லை. தமிழக அரசின் சார்பில்தான் விளக்கம் தரப்படும். அதிலும், ‘ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்றெல்லாம் அறிக்கை வெளியிடுவது மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு தொடர்புடையது. கவர்னர் மாளிகையிலிருந்து தன்னிச்சையாக அறிக்கைகள் வெளியிடப்பட்ட வரலாறு இதுவரை இல்லை. ஆனால், இந்திய கவர்னர்களின் வரலாற்றில் முதல்முறையாக எனும் அளவுக்கு, பன்வாரிலால் புரோஹித் கட்டளையால் இந்த அதிரடி அறிக்கை வெளியானது. ‘மாநில சுயாட்சியைக் காக்க ஆயுள் முழுக்க சிறை செல்லத் தயார்’ என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கர்ஜித்தார். அத்துடன் நில்லாமல், சட்டசபையிலும் கவர்னர் பற்றி தி.மு.க-வினர் பிரச்னை எழுப்ப முயன்றார்கள். கவர்னரை ஒருவழி செய்வது என்று தீர்மானம் எடுத்திருக்கிறார் ஸ்டாலின். கவர்னரின் கட்டளையும் ஸ்டாலினின் கர்ஜனையும் தமிழக அரசியலில் புது விஷயமாகப் பார்க்கப்படுகிறது.’’

‘‘ஏன் இந்த மோதல்?’’

‘‘அதைத்தான் பலரும் ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். கவர்னர் மாவட்டவாரியாக ஆய்வுகளுக்குப் போனபோது, ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். உடனே அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து விளக்கம் கொடுத்தார் கவர்னர். ஸ்டாலினுக்கே இதில் ஆச்சர்யம். ‘பெரும்பான்மை இல்லாத ஓர் அரசை நீங்கள்தான் தாங்கிப் பிடித்திருக்கிறீர்கள்’ என ஆதங்கத்துடன் அப்போது சொல்லிவிட்டு வந்தார் ஸ்டாலின். அடுத்து, நிர்மலாதேவி விவகாரம் பெரும் சர்ச்சையாகிப் பல கட்சியினரும் கவர்னரைக் காய்ச்சி எடுத்தபோதுகூட, தி.மு.க அடக்கியே வாசித்தது. அதன்பிறகு கவர்னர் போன பல ஊர்களில் சம்பிரதாயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார்கள். ஆனால், நாமக்கல் போராட்டத்தில் ஆரம்பித்தது பிரச்னை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick