“நம் வீட்டுத் தண்ணீர்த் தொட்டிகள்... பிரான்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்!”

கொந்தளிக்கும் கோவை மக்கள்

கோவை மாநகர மக்களுக்கான குடிநீரை எப்போது விநியோகிக்க வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும் என்பதை இனி முடிவுசெய்யப்போவது கோவை மாநகராட்சி அல்ல; பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் அதைச் செய்யும். ‘இனி குடிநீர்க் கட்டணத்தை யார் விதிப்பார்கள்? எதன் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும்? வீடுகளில் தண்ணீர்க் குழாய் இல்லாததால் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் மக்களின் நிலை என்ன ஆகப்போகிறது?’ போன்ற கேள்விகளை அச்சத்துடன் எழுப்புகிறார்கள் கோவை மக்கள்.

‘கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகிக்கும் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பது’ என 2017-ல் உள்ளாட்சித் துறை தீர்மானித்தது. அதன்படி, கோவையில் 60 வார்டுகளில் குடிநீர் விநியோகிக்கும் பணிகளை, பிரான்ஸைச் சேர்ந்த ‘சூயஸ் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (SPPL) என்ற நிறுவனத்துக்கு இப்போது கொடுத்துள்ளனர். 400 மில்லியன் யூரோவுக்கு (ரூ. 3,167 கோடி) இந்த டெண்டரை எடுத்திருப்பதாகக் கடந்த பிப்ரவரி மாதம் தமது இணையதளத்தில் சூயஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக இவ்வளவு தொகைக்குக் குடிநீர் விநியோகத்தை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது. 26 ஆண்டுகளுக்குக் குடிநீர் விநியோகத்துக்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது, 60 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகள் குறித்த கணக்கெடுப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஓராண்டில் ஆய்வு முடித்து, அடுத்த நான்கு ஆண்டுகளில் குழாய்களைச் சீரமைத்து, பிறகு 21 ஆண்டுகளுக்குத் தண்ணீர் விநியோகத்தை இந்த நிறுவனம்தான் மேற்கொள்ளும். இதுவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடமிருந்து 1,000 லிட்டர் குடிநீரை 9.75 பைசாவுக்கு வாங்கி, அதை மானிய விலையில் 1,000 லிட்டருக்கு 4.50 பைசாவுக்கு மக்களுக்கு விநியோகித்துவருகிறது கோவை மாநகராட்சி. இனி என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick