மிஸ்டர் கழுகு: கொள்ளைக் கூட்டணி... கொந்தளிக்கும் ஐ.ஜி!

“புதிய உத்தரவுகள், அதிர்வூட்டும் நியமனம், அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் என்று கடந்த சில நாள்களாக நீதிமன்றங்களை மையமாக வைத்தே, தமிழகம் பரபரப்பாக இருந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்தமர்ந்தார் கழுகார்.

“தினகரன் அணி இப்போது, கொஞ்சம் தெம்பாக இருப்பதாக நம் நிருபர்கள் கட்டுரை கொடுத்திருக்கிறார்களே’’ என்றபடி, கட்டுரையை அவர் முன்பாக வைத்தோம். ‘எந்திரன்’ படத்தில் வரும் சிட்டி ரோபோ போல ‘சர்சர்’ரென்று கண்களுக்கு முன்பாக அந்தக் கட்டுரை அடங்கிய பக்கங்களை வீசியவர்,

“18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிக்கக் கூடாது என்பதில்தான் தினகரன் தரப்பு குறியாக இருந்தது. அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. நீதிபதி விமலா மாற்றப்பட்டு, நீதிபதி சத்யநாராயணாவை உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும்போது, தெம்பு கூடாமல் என்ன செய்யும்?’’ என்று சொன்னார்.

“நீதிபதி விமலா நியமனத்தில் தினகரன் அணிக்கு என்ன அதிருப்தி?

“ஜனவரி 4-ம் தேதி அரசு வழக்கறிஞர்கள் நியமனம் குறித்த அரசு ஆணை வெளியானது. அதில் 65-வது பெயராக சாரதாதேவி என்று இருந்தது. நீதிபதி விமலாவின் மருமகள்தான் சாரதாதேவி. விமலாவின் மகனும் கவிஞருமான விவேக்கின் மனைவி. கிரிமினல் வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞராக சாரதாதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மருமகளை அரசு வழக்கறிஞராக நியமித்த தமிழக அரசுக்கு எதிராக, நீதிபதி விமலா எப்படி நேர்மையாக வழக்கை விசாரிப்பார் என்பதுதான், தினகரன் அணியின் அதிருப்திக்குக் காரணம்!’’

“ஓஹோ!”

“தினகரன் அணியினரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிஷன் கவுல், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருக்கு இங்குள்ள அரசியல் நிலையும், நீதிமன்ற நடவடிக்கைகளும் அத்துப்படி! அதனால், தினகரன் தரப்பு வாதத்தை அவர் புரிந்துகொண்டார். ஆனாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மனுவில் இருந்த பல வாசகங்களை மாற்றச்சொல்லிக் கடுமை காட்டினார்.  தினகரன் தரப்பினரின் வழக்கறிஞர், அவற்றை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொடுத்தார். பிறகுதான், நீதிபதி விமலா மாற்றப்பட்டார்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick