வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான் | TTV Dinakaran master plan for Case and Election - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/06/2018)

வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான்

தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களின் நீதிமன்றப் போராட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஓர் இடத்தில்போய் முட்டிக்கொள்ள... கிட்டத்தட்ட விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார் தினகரன். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிருப்தி ஏற்பட, கொஞ்சம் ஆடித்தான் போனார். தன் தளபதியாக தினகரன் நினைத்துக்கொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்ட ஆரம்பிக்க, மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளானார். இந்நிலையில், தினகரன் தரப்பில் தற்போது திடீர் உற்சாகம் தென்பட ஆரம்பித்துள்ளது. ‘‘ஏதாவது ஓர் அதிரடி ஆட்டம் ஆடியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக்கொண்டுவிட்ட தினகரன், தற்போது ஒரு மாஸ்டர் பிளானுடன் ரெடியாகிவிட்டார்’’ என்று தெம்பாகக் கூற ஆரம்பித்துள்ளனர் அவரின் ஆதரவாளர்கள்.

18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்திலிருந்து தினகரன் தரப்புக்குச் சாதகமான தீர்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி விமலா, தினகரன் தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டு, நீதிபதி சத்யநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவர் வழங்கப்போகும் தீர்ப்புப் பாதமாக வந்தால்கூட, மேற்கொண்டு சட்டப்போராட்டத்தில் இறங்காமல், காலியாக இருக்கும் அந்த 18 தொகுதிகளிலும் தேர்தலை எதிர்கொள்வதுதான் தினகரனின் திட்டம். கூடவே நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பணிகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் முழுக்கத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தினகரன் கூடாரத்தின் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது!